திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்பி நேற்று (அக்டோபர் 9) நடந்த பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டார். திமுகவின் தலைமைக் கழக மேடையில் நேற்று முதல் இடம்பெற்றார் கனிமொழி.
இந்த நிலையில் பொதுக்குழுவில் அனைத்து அணிகள் சார்பில் பேசிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மேடையில் கனிமொழியை அத்தை கனிமொழி என உரிமையாக சொந்தம் கொண்டாடி அழைத்து வாழ்த்தினார்.
அதேபோல துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரை மாமா என்று அழைத்தும், மற்றவர்களை அண்ணன் என்று அழைத்தும் வாழ்த்தினார்.
பொதுக்குழுவில் வாழ்த்திவிட்டாலும் நேற்று இரவு கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்துக்கு சென்ற உதயநிதி அங்கே மீண்டும் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
தனது பாட்டி ராஜாத்தி அம்மையாருடனும் கனிமொழியுடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் திமுகவினரிடத்தில் உருக்கமாக பகிரப்பட்டு வருகிறது. கனிமொழியும் உதயநிதியும் கனிமொழியின் வீட்டிலுள்ள சோபாவில் எதிரெதிரே அமர்ந்திருக்க, நடு நாயகமாக அமைந்த சோபாவில் கலைஞரின் சிறு வயது புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
புகைப்படத்தைப் பார்த்தபோது கனிமொழிக்கு உதயநிதி வாழ்த்து தெரிவிப்பதை கலைஞர் பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது.
மேலும் உதயநிதியின் ஃபேஸ்புக்கில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு கமெண்ட்டில், ‘கருப்பு சோபாவில் கலைஞர்’ என்று கருத்திட்டு மகிழ்ந்தனர் திமுகவினர்.
இதுகுறித்து விசாரித்தபோது, “சிஐடி காலனி இல்லத்தில் கலைஞர் இருக்கும்போதெல்லாம் இந்த இடத்தில் நடு நாயகமான சோபாவில்தான் அமர்ந்திருப்பார்.
அவரது மறைவுக்குப் பின் அந்த இடத்தில் யாரும் அமர்வதில்லை. கலைஞர் அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறார் என்ற நினைவை ஏற்படுத்தும் வகையில் அந்த சோபாவில் கலைஞரின் புகைப்படத்தை வைத்துவிட்டார் ராஜாத்தி அம்மையார்.
அப்படித்தான் நேற்றும் உதயநிதி- கனிமொழி சந்திப்பு நடந்தபோது கலைஞர் வழக்கமான தன் சோபாவில் அமர்ந்திருக்கிறார்” என்று உருகுகிறார்கள் கனிமொழி வட்டாரங்களில்.
–வேந்தன்
அன்புமணி எழுப்பும் அதிமுக்கிய சோழர் விவகாரம்!
நயன் -விக்கியிடம் விளக்கம் கேட்கப்படும்: மா.சுப்பிரமணியன்