என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் ரெய்டுக்கு வாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பாக முகவர்கள் BLA2 மற்றும் பூத் அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தன்னாட்சி அதிகாரம் பெற்ற விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி, 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுகவை வெற்றி பெற செய்வோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற அணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கூட்டணி வெற்றி பெற நீங்கள் பாடுபடவேண்டும்.
பாசிஸ்ட்டுகள் இப்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. திமுகவில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழிலாளர் அணி என பல அணிகள் இருக்கின்றன.
அதிமுகவிலும் பல அணிகள் இருக்கின்றன. ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி என பல அணிகள் இருக்கின்றன.
திமுகவில் மாவட்டத்துக்கு ஒரு கட்சி அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவில் மாவட்டத்துக்கு மூன்று கட்சி அலுவலகம் இருக்கின்றன. எந்த அலுவலகத்துக்கு போவது என யாருக்குமே தெரியாது.
அதுபோன்று பாஜகவுக்கும் பல அணிகள் இருக்கின்றன. அந்த அணிகளை எல்லாம் தேர்தல் நேரத்தில் இறக்கிவிடுவார்கள். சிபிஐ அணி, ED அணி, ஐடி அணி ஆகியவை இருக்கின்றன.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களது ED சிபிஐ ஆகியவை 95% எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு மகாராஷ்டிராவில் பாஜக என்னென்ன கூத்தை எல்லம் அரங்கேற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக அதன் தலைவர்களில் ஒருவரான அஜித் பவாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அவருக்கு மட்டுமல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன் முசரஃப், சாகன் புஜ்பால் ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. சோதனை நடத்தியது.
இவர்கள் எல்லாம் தற்போது பாஜகவின் பக்கம் வந்து விட்டார்கள். அதனால் அவர்கள் புனிதர்களாகி விட்டார்கள். இதுதான் பாஜகவின் லட்சணம். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 121 அரசியல் தலைவர்களிடம் அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. அதில் 115 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள்.
இன்றைக்கு தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊழல் ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மறுப்பு தெரிவிக்கின்றார்.
முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதெல்லாம் அமலாக்கத் துறை சோதனை செய்தது. விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஓடி வந்து சுவர் ஏறி குதித்ததையெல்லாம் பார்த்திருப்பீர்கள். இப்படிதான் அதிமுகவை பாஜக அடிமையாக வைத்திருக்கிறது” என்று விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ந்து, மோடி வந்தாலும் பயப்படமாட்டோம், ED வந்தாலும் பயப்படமாட்டோம் என்று கூறிய உதயநிதி, “அதிமுகவை வேண்டுமானால் விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி வைத்திருக்கலாம். இந்த பம்மாத்து வேலைகள் எல்லாம் திமுகவிடம் பலிக்காது.
நேற்று கூட பாஜக தலைவர்களில் ஒருவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அடுத்த ரெய்டு உதயநிதி வீட்டில் நடக்க போகிறது என்று சொல்லியிருக்கிறார்.
வரட்டும்…. என் அட்ரஸை வேண்டுமானால் நான் கொடுக்கிறேன். இந்த EDக்குலாம் பயப்படமாட்டேன். நான் கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன். எனக்கு மடியில் கனமில்லை…. வழியில் பயமில்லை.
எப்போது வேண்டுமானாலும் வாருங்கள், நான் சவால் விடுகிறேன். திமுகவின் கிளை செயலாளரைக் கூட ஒன்றும் செய்ய முடியாது.
வரும்போது சொல்லிவிட்டு வாருங்கள், ஏனென்றால் நான் சுற்றுப்பயணத்தில் இருப்பேன்” என்று தனது வழக்கமான பாணியில் சிரித்துக்கொண்டே விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, “லிஸ்ட் போட்டு தூக்குறோம். எனக்கு வந்த தகவல் உண்மையாக இருந்தால் இன்னும் 24 மணி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் வீட்டு கதவை கூட ED தட்டலாம்” என தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் மோடிக்கும் EDக்கும் பயப்படமாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
பிரியா
மா.சு.வின் திடீர் விசிட் : அதிகாரிகள் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?
ஆர்டிஓ அலுவலகத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சஸ்பெண்ட்!
இல்ல பச்ச புள்ள.
வச்சி செய்வானுக..
நீங்க 5 வது வண்டி..😁😁
ஏன் மூனாவது வண்டில ஏற இத்தனை ஆச🥰🥰