உதயநிதிக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் கேட்ட ஒரே கேள்வி.. வாபஸ் பெற்ற மனுதாரர்கள்!

Published On:

| By christopher

udhayanithi stalin supreme court

சனாதன தர்மம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 27) தள்ளுபடி செய்தது.

கடந்த 2023 ஆண்டு சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது.

அதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் பெயரை ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்” என்று பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பிரதமர் மோடி முதல் பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டின் பல இடங்களில் வழக்குகள் பதியப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிராகவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் வழக்கறிஞர் பி.ஜகன்நாத், வினித் ஜின்டால் மற்றும் சனாதன் சுரக்ஷா பரிஷத் அமைப்பு என மூன்று தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், உதயநிதி ஸ்டாலினுக்காக மூத்த வழக்கறிஞர் பி வில்சனும் ஆஜராகி, இந்த ரிட் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றவையல்ல’ என்று வாதிட்டு, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் டாமா சேஷாத்ரி நாயுடு, ‘உதயநிதி ஸ்டாலினின் பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்றும், தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியது என்றும் வாதிட்டார்.

மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக தள்ளுபடி செய்யப்பட்டன, மனுதாரர்கள் சட்டத்தின் கீழ் மாற்று தீர்வுகளைப் பெற சுதந்திரம் அளித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மனுக்களை விசாரிக்க தங்களது விருப்பமின்மை முதலில் தெரிவித்தனர். தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 32ன் படி, இந்த ரிட் மனுக்களை எப்படி விசாரணைக்கு ஏற்றுகொள்ள முடியும்?” என்று மனுதாரர்களை நோக்கி கேள்வி எழுப்பினர்.

அதற்கு உடனடியாக தங்களது மனுக்களை வாபஸ் பெறுவதாக மூத்த வழக்கறிஞர் டாமா சேஷாத்ரி தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான மூன்று ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share