தமிழ்நாடு சட்டமன்றத்தின் கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி காலை 9.30க்கு கூடுகிறது. இதை இன்று (நவம்பர் 25) சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பேரவைக் கூட்டம் எத்தனை நாள் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும். அலுவல் ஆய்வுக் குழுவில் எல்லா கட்சியினரும் இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுமையாக லைவ் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அப்பாவு.
“இப்போதைய முதல்வர் வந்தபின்புதான் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது. சட்டமன்ற கூட்டத் தொடர் முழுமையாக லைவ் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் 2024-25-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை நடத்தும் வகையில் கடந்த ஜூன் 20-ந்தேதி தமிழக சட்டமன்றம் கூடியது. அப்போதுதான் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் ஜூலை 29-ந்தேதி வரை நடந்தது.
இதற்கிடையே அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பிறகு, முதன் முறையாக வரும் டிசம்பர் 9 ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது.
துணை முதல்வர் நியமனத்துக்குப் பிறகு அரசு சார்பில் அமைச்சர்களின் சீனியாரிட்டி குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. அதில் முதல்வருக்கு அடுத்து மூத்த அமைச்சர் துரைமுருகன், அவரையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் துணை முதல்வர் உதயநிதிக்கு முதல்வர், அமைச்சர் துரைமுருகனை அடுத்து இடம் ஒதுக்கப்பட இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ஷாஹி ஜமா மஸ்ஜித் கலவரம்… 5 பேர் பலி: உத்தரப் பிரதேசத்தில் நடப்பது என்ன?
ஐஸ்வர்யாவுடன் விவாகரத்தா? – அபிஷேக்பச்சன் சொல்வது என்ன?