நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் கையெழுத்து இயக்கம் குறித்து இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 18) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
காணொளி காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது பேசிய அவர் “நீட் தேர்வை ரத்துச் செய்ய வேண்டும்’ என்ற நம் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் மறைவுக்குப் பிறகு அடிமை அ.தி.மு.க.வினர் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பா.ஜ.க.வுக்குப் பயந்து நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். முதல் பலி தங்கை அனிதா தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மருத்துவராகும் கனவோடு படித்த நம் வீட்டுப் பிள்ளைகளில் பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்ய அவர்களால் தள்ளப்பட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து நாம் பல போராட்டங்களை நடத்தி, அடிமை அ.தி.மு.க. அரசுக்கும், பாசிச பா.ஜ.க. அரசுக்கும் பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்திருக்கின்றோம்.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்த மூன்று அணிகளின் சார்பாக, நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி முடித்தோம்.
கட்சியைக் கடந்து பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்ட அந்த உண்ணாவிரத அறப்போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. ‘நீட் தேர்விற்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் மனநிலை நீர்த்துபோகவில்லை. எதிர்ப்பு அப்படியே இருக்கிறது’ என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், அந்த உண்ணாவிரத அறப்போராட்டம் அமைந்திருந்தது.
அந்தப் போராட்டத்திலேயே, ‘நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை நாம் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தேன். அதற்கான முன்னெடுப்பாகத்தான் வருகின்ற 21-ஆம் தேதி கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்கவுள்ளோம்.
50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கம் இருக்க வேண்டும். அதற்காக நாம் ஒவ்வொருவரும் உழைத்தால்தான் அதைச் சாத்தியமாக்க முடியும்.
மக்களின் கையெழுத்துகளைப் பெறுவதற்காகப் போஸ்ட் கார்ட் மற்றும் இணையதளம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. போஸ்ட் கார்டு என்பது ஓர் அடையாளத்துக்குத்தான். அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாகப் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.
ஏனெனில், அதில் ஒவ்வொருவரும் கையெழுத்து இட இட, நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை பேர் கையெழுத்து இட்டுள்ளனர் என்ற கவுன்ட் டிஜிட்டலாக அந்த வெப்சைட்டில் தெரியும். அதனால் உறுப்பினர் சேர்க்கைக்குப் படிவங்களை எடுத்துச் செல்வது போல் ஐ-பாட், டேப்களை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று வீடு வீடாக ஏறி நாம் கையெழுத்தைப் பெற வேண்டும்.
ஒரு ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள் இருந்தால், ஓர் அணிக்கு தலா 3 ஊராட்சி என இந்தப் பணியை நம் மூன்று அணி நிர்வாகிகளும் தங்களுக்குள் பேசி பிரித்துக் கொண்டு மக்களிடம் கையெழுத்துப் பெற வேண்டும். எந்த மாவட்டத்தில் கையெழுத்து அதிகமாகப் பெறப்பட்டுள்ளது, எந்த மாவட்டத்தில் குறைவாகப் பெறப்பட்டுள்ளது என்பதையும் இதில் நாம் எளிதாக எடுத்துவிட முடியும். கவுன்ட் காட்ட வேண்டும் என்பதற்காக இல்லாதவர்களின் பெயர்களை போலியாக எழுதி, ஏதோ 10 நம்பர்களைப் போன் நம்பர் என டைப் செய்வது போன்ற தவறான விஷயங்களைத் தயவுசெய்து தவிர்க்குமாறு, நான் உங்களை இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை நம்முடைய முதலமைச்சரிடம் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர்அணியின் மாநாட்டில் ஒப்படைக்கப்படும். பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும்.
மாநாட்டுக்கு இன்றிலிருந்து சரியாக இன்னும் 59 நாட்களே உள்ளன. 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம் என்பதை நீங்கள் நினைவில் கொண்டு இயங்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். கையெழுத்துப் பெறும்போது எதற்காக இந்தக் கையெழுத்துப் பெறுகிறோம் என்பதை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவும். தேவையெனில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டியதன் அவசியம் குறித்த துண்டறிக்கைகளை விநியோகம் செய்தும் கையெழுத்துப் பெறலாம்.
இவை தவிரக் கல்லூரிகளுக்கு முன்பு kiosk அமைத்தும் மாணவர்களின் கையெழுத்துகளைப் பெறலாம். அது இந்த இயக்கத்தை இன்னும் மக்களிடம் நெருக்கமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க உதவும். இப்படிக் கையெழுத்து பெறுவதைத் தினமும் புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றைச் சம்பந்தபட்ட நிர்வாகிகள் தங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர, நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
21-ம் தேதி நடைபெற உள்ள கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சிக்கு முறைப்படி மாவட்டச் செயலாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்து, திருமண மண்டபம் போன்ற இடங்களை முன்பதிவு செய்து, பொதுமக்களை, மாணவர்களை அழைப்பது போன்ற பணிகளை இப்போதிலிருந்தே நீங்கள் தொடங்க வேண்டும்.
அதேபோல் 72 கழக மாவட்டங்களில் சென்னையில் உள்ள 6 மாவட்டங்கஸ்ளுக்கும் சேர்த்து, கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இது தவிர, மீதி 66 கழக மாவட்டங்களுக்கும் தனித்தனியாக இந்தக் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பேச்சாளரை தலைமையில் இருந்து அனுப்ப உள்ளோம். அதற்கான அறிவிப்பும் நாளை (இன்று) வெளி வரும்” என்று ஆலோசனைகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்ளள சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இந்தியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த நியூசிலாந்து!
மக்களின் வெறுப்பை மறைக்க சனாதனத்தை எதிர்க்கின்றனர்: எடப்பாடி