ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு வில் அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 20) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகளில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்னாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு 35 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை இழந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி முதல்வராக பதவியேற்றார்.
இதனால் உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே அணியினர் சிவ சேனா கட்சிக்கு சொந்தம் கொண்டாடி தேர்தல் ஆணையத்தை நாடினர்.
கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணி தான் உண்மையான சிவ சேனா கட்சி என்று வில், அம்பு சின்னத்தை ஒதுக்கியது.
தேர்தல் ஆணையம் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்பிற்கு ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி தான் உண்மையான சிவசேனா கட்சி என்பதால் வில் அம்பு சின்னத்தை அவர்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை!
மகளிர் டி20: பந்துவீச்சில் இலங்கையை பந்தாடிய நியூசிலாந்து!