டிஜிட்டல் திண்ணை:  ‘என்னை ஏமாற்ற முடியாது’- இளைஞரணி நிர்வாகிகளிடம் உஷ்ணம் காட்டிய உதயநிதி

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் மெசெஞ்சரில்  டெக்ஸ்ட் மெசேஜும், இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களும் வந்து விழுந்தன.

திமுக இளைஞரணி 42 ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதமும்,  அதை ஒட்டி திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்   நேற்று இரவு நடத்திய காணொளி ஆய்வுக் கூட்டப் படங்களும்தான் அவை.

அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருந்து பின் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர்  அதன் பிறகு தமிழக முதல்வர் என்று உயர்ந்துள்ள மு.க.ஸ்டாலின் இளைஞரணியோடு சென்டிமென்ட்டாக நெருக்கமானவர். அந்த காரணத்தால்தான்  இன்று (ஜூலை 20) திமுக இளைஞரணியின் 43 ஆவது பிறந்தநாளை ஒட்டி நேற்றே கடிதமொன்றை எழுதினார்.  

’கலைஞர்  உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றும் மேடைகளில் ஓரமாக அமர்ந்து, அவர்களின் உரைகளை ஒரு டேப்ரெகார்டரில் பதிவு செய்து, பின்னர் அதனை முரசொலியில் அச்சிட ஏற்ற வகையில் எழுதித்தரும் பணியையும் மேற்கொண்டேன்’ என்று  தனது இளமைக் கால நினைவுகளில் தொடங்கிய ஸ்டாலின் பல்வேறு அனுபவங்களை அந்த கடிதத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

மேலும், ‘இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் களத்தில் தம்பி உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கொரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன். மதவாத அரசியல் சக்திகள் அந்த மண்ணில் ஊடுருவச் செய்யாமல் தடுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக்  கூட்டங்கள்  ஒவ்வொரு தொகுதியிலும் நடத்தப்படுகின்றன. இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் நேற்று (ஜூலை 19) இரவு 7 மணிக்கு  இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அந்த அணியின் மாநில துணைச் செயலாளர்கள்,  மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை காணொளி வழியாக கூட்டினார் உதயநிதி ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் முதலில் நிர்வாகிகளை எந்த தடையுமின்றி பேச அனுமதித்தார். பலரும், ‘அண்ணே உங்களால்தான் நான் இன்று கவுன்சிலராக இருக்கிறேன், சேர்மனாக இருக்கிறேன்’ என்றெல்லாம் சொல்லி தங்களது  மாவட்டங்களில் நடந்த திராவிட மாடல்  பாசறைகள் கூட்டம் பற்றியும் விரிவாக பேசினார்கள். அவர்களின் பேச்சை கூர்ந்து கவனித்த உதயநிதி, ‘எத்தனை உறுப்பினர்களை சேர்த்திருக்கீங்க?’ என்று கேள்வி எழுப்பினார்.  அவர்கள் சொல்லச் சொல்ல… சம்பந்தப்பட்ட மாவட்டத்தை எழுதி உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் குறித்துக் கொண்டார்.

நிர்வாகிகள் பேசி முடித்த பிறகு  உதயநிதி பேசினார். அவ்வப்போது எழுந்த தொழில் நுட்பக் கோளாறுகளால் உதயநிதி ரொம்ப நேரம் பேசவில்லை. ஆனாலும்  அவர் பேசிய நிமிடங்களில் வேறு மாதிரி உதயநிதியை பார்த்ததாக சொல்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரணி நிர்வாகிகள்.

‘தலைவர் நம்மை நம்பி பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்காரு. இளைஞரணிக்கு 18 வயசுலேர்ந்து 35 வயசு வரைக்குமான இளைஞர்கள், இளம்பெண்களை உறுப்பினர்களா சேர்க்கணும்னு நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்களும் உற்சாகமாக உறுப்பினர்களை சேர்த்தீங்க. ஆனா இப்ப ஏனோ அதுல கொஞ்சம் தொய்வு இருக்குறதா தெரியுது.  உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்குல பட்டியலை அனுப்புறீங்க. ஆனா செக் பண்ணி பாத்தா அதுல போலி உறுப்பினர்களும் இருக்காங்க. இன்னும் சொல்லப் போனா உயிரோட இல்லாதவங்களை எல்லாம் திமுக இளைஞரணியில சேர்த்து வச்சிருக்கீங்க. எல்லா நிர்வாகிகளையும் சொல்லலை. அப்படி செஞ்ச நிர்வாகிகள் யாருனு பார்த்து நடவடிக்கை எடுப்போம். இனிமே இதுபோல ஏமாத்த முயற்சி பண்ணாதீங்க.

வீட்டுக்கு வீடு நான்கு பேர் மட்டும் போங்க. அங்க 18 வயசுலேர்ந்து 35  வரைக்கும் உள்ளவங்க இருக்காங்களானு கேளுங்க. அப்படி இருந்தா அவங்ககிட்ட நம்ம கட்சியின் கொள்கையை எடுத்துச் சொல்லி பிடிச்சிருந்தா சேர்ந்துக்க சொல்லி வேண்டுகோள் வைங்க. அவங்க ஏத்துக்கிட்டாங்கனா உரிய ஆவணங்களோடு உறுப்பினரா சேர்த்து உடனடியா நம்பர் கொடுங்க. மறுபடியும் சொல்றேன் உண்மையான உறுப்பினர்களை சேருங்க’  என்று கொஞ்சம்  உஷ்ணமாகவே பேசிய உதயநிதி.. அடுத்து திராவிட மாடல் பாசறை விவகாரம் பற்றியும் பேசினார்.

‘திராவிட மாடல் பாசறை, பயிற்சிப் பாசறையை ரொம்ப சிறப்பா நடத்திக்கிட்டிருக்கீங்க.  இப்ப ஒவ்வொரு தொகுதியிலும் நடத்திக்கிட்டிருக்கோம். அதுல பேசற சிறப்புப் பேச்சாளர்களுக்கான செலவை இளைஞரணித் தலைமை ஏத்துக்குது. ஆளுங்கட்சிங்குறதால உங்களுக்கெல்லாம் செலவு வைக்கணும்னு நான் நினைக்கலை. யாரும் கஷ்டப்படக் கூடாது. திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்களை பெரிய பெரிய மண்டபத்துலதான் நடத்தணும்னு யாரும் உங்ககிட்ட கட்டாயப்படுத்தலை. அரசாங்க அரங்கங்களே கம்மியான  வாடகையில கிடைக்குது. அதை பயன்படுத்திக்கங்க.  நம்ம கட்சிய தலைவரெல்லாம்  டீ கடைகள்லயும், சலூன்கள்லயும் வளர்த்திருக்காங்க. அதனால ஆடம்பர செலவு பண்ணனும்னு நினைச்சு கஷ்டப்படாதீங்க.  இப்ப தொகுதி அளவுல நடக்குற திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்களை அடுத்து ஒன்றிய அளவுல, கிராம அளவுல நடத்தணும். 25 லேர்ந்து 50 பேர் வந்தா கூட பரவாயில்லை.  அவங்களுக்காக பாசறைக் கூட்டங்களை நடத்துவோம்’ என்றெல்லாம்  பேசியிருக்கிறார் உதயநிதி” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

+1
1
+1
3
+1
0
+1
16
+1
2
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *