டிஜிட்டல் திண்ணை: இளைஞரணியில் உதயாவின் புதிய ட்விஸ்ட்- உதறலில் மாசெக்கள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் படங்களை அனுப்பி, சில கேள்விகளையும் தொடுத்திருந்தது.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருக்கும் உதயநிதி இப்போது இளைஞர் நலன், விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்க அமைச்சராகவும் ஆகிவிட்டதால் அவருக்கு கூடுதல் பணிகள் சேர்ந்துவிட்டன.

அவர் அமைச்சர் என்ற அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் இன்னொரு பக்கம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களை நியமிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டதுபோல மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து முழுக்க முழுக்க தன் வசம் எடுத்துக் கொண்டுவிட்டார் உதயநிதி.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் ஒரு இளைஞரணி அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள் பதவிக்காக விண்ணப்பங்கள் டிசம்பர் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டன. 26 ஆம் தேதியே மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் வாங்கிய விண்ணப்பங்களை மொத்தமாக இளைஞரணித் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கொடுத்துவிட்டனர்.

ஆனாலும் பல மாசெக்களும், அமைச்சர்களும் தங்களது மகனுக்கோ தங்களது உறவினர்களுக்கோ அல்லது தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சியினருக்கோ இந்த பதவியை பெற்றுத் தர தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இப்போது விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்துக்குள் அணிகளின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டதால் விரைவில் நேர்காணல் நடத்தி மாவட்ட அமைப்பாளர்களை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் உதயநிதி.

Udayanithi new twist dmk district secretaries shock Digital thinnai

இந்த நிலையில்தான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தேர்வில் புதிய விதிமுறை ஒன்றை இணைத்திருக்கிறார் உதயநிதி. அதாவது இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன்.

உதயநிதிக்கு இப்போது 45 வயது ஆகிறது. ஏற்கனவே ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது அவரது வயது குறித்த விமர்சனங்கள் திமுகவுக்கு வெளியே வைக்கப்பட்டன. ஆனாலும் 2017 இல் திமுக செயல் தலைவராக பொறுப்பு ஏற்கும் வரை இளைஞரணிச் செயலாளர் பதவியை தன் வசமே வைத்திருந்தார் ஸ்டாலின்.

அதன் பிறகே வெள்ளக்கோவில் சாமிநாதனுக்குக் கொடுத்தார். இருவருடங்கள் அந்த பதவியில் இருந்த சாமிநாதன் 2019 இல் உதயநிதிக்காக அப்பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது இளைஞரணிச் செயலாளரான தனக்கு 45 வயதாகும் நிலையில் மாவட்ட அமைப்பாளர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார் உதயநிதி. அப்படி இருந்தால்தான் தனக்கு முழுக்க முழுக்க கட்டுப்படக் கூடிய தனக்கு முழுதும் தோதான இளைஞரணியை கட்டியெழுப்ப முடியும் என்று கருதுகிறார்.

ஏற்கனவே கடந்த உட்கட்சித் தேர்தலில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களுக்கு கணிசமானோருக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர், பிற அணிகளில் மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் போக மீதமிருக்கும் அமைப்பாளர்களில் மிகச் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு சிலருக்கு வேண்டுமானால் இந்த 40 வயது என்ற நிபந்தனையை தளர்த்தலாமே தவிர பெரும்பாலானோருக்கு 40 வயதுதான் ஏஜ் லிமிட் என்பதுதான் உதயநிதியின் திட்டம்.

40 வயது என்பது அரசியலின் ஆரம்ப கட்டத்தில் உள்ள வயது, இந்த வயதில் உள்ளவர்களுக்கு பண வசதியும் பெரும்பாலும் இருக்காதே என்று உதயநிதியிடம் சில மாசெக்களே உதறலோடு கேட்டிருக்கிறார்கள். ‘பணம் மட்டுமே போதுமா?’ என்று பதிலுக்கு கேட்டிருக்கிறார் உதயநிதி.

எனவே நேர்காணலை எளிதாக்கும் வகையில் 40 வயது, அதற்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு பரிசீலிக்கப்பட இருக்கின்றன, இதனால் இளைஞரணியில் உண்மையான இளரத்தம் ஓடப் போகிறது’ என்கிறார்கள் அன்பக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

‘விலை’ மாமணிகளா? – விசாரணை நடத்த உத்தரவு!

பணமதிப்பழிப்பு: நீதிபதி நாகரத்னா சரமாரிக் கேள்வி!

+1
0
+1
1
+1
1
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *