வைஃபை ஆன் செய்ததும் தென் மாவட்ட சோர்ஸுகளிடமிருந்து நோட்டிபிகேஷன் ஒலித்துக் கொண்டே இருந்தது. வந்த புகைப்படங்களையும் தகவல்களையும் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி எம்.பி.யின் தொகுதியான தூத்துக்குடிக்கு மேற்கொண்ட விசிட், அதை ஒட்டி நடந்த நிகழ்வுகள் தென் மாவட்ட திமுகவுக்குள் விவாதங்களை கிளப்பியுள்ளன.
சென்னையில் இருந்து நவம்பர் 20ஆம் தேதி பிற்பகல் விமானத்தில் புறப்பட்டு தூத்துக்குடி அடைந்தார் உதயநிதி. தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் -அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
ஏகப்பட்ட பைக்குகளில் இளைஞர்களை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெளியே திரட்டி உதயநிதிக்கு வரவேற்பு அளித்தார் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல்.
அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை குமாரகிரி ஊராட்சியில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் இல்லம் தோறும் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த ஐசக் என்பவரின் கைகுழந்தைக்கு ஜோவின் என பெயர் சூட்டினார். இதெல்லாம் தெற்கு மாசெ அனிதாவுடைய பகுதி. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் ஏற்பாட்டில் அண்ணா நகர் பகுதியில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டார்.
அதை முடித்துவிட்டு நேற்று இரவு தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் தங்கினார் உதயநிதி. இன்று (நவம்பர் 21) காலை இயக்குனர் மாரி செல்வராஜின் ’வாழை’ படத்தின் படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் உதயநிதி. இதை முடித்துக்கொண்டு மீன் வளத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு உதயநிதியை அழைத்துச் சென்றார். அங்கே உதயநிதிக்காக அரசு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
அதாவது பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021 – 22 ன் கீழ் தாமிரபரணி மற்றும் வைகை ஆற்றில் 10 லட்சம் நன்னீர் மீன் குஞ்சுகளை விடுவதற்கு மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் 27 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் 21 உலக மீனவர் தினம் என்பதற்காக தூத்துக்குடிக்கு வந்திருக்கும் உதயநிதியை வைத்து அரசு விழாவை நடத்த முடிவு செய்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அதன்படியே மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து இன்று காலையிலேயே குட்டி யானைகளில் மீன் குஞ்சுகளைப் பிடித்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு அருகே இருக்கும் பெருமாள் கோயிலை ஒட்டி ஓடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைக்குக் கொண்டு வந்தனர்.
அங்கே வந்த உதயநிதி ஸ்டாலின் சில பாக்கெட்டுகளை ஓப்பன் செய்து தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில் ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியோடு சிலருக்கு மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகளையும் வழங்கினார் உதயநிதி,
இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் வைக்கப்பட்ட பேனரில் தலைமை கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே குமரி மாவட்ட அமைச்சரான மனோ தங்கராஜ் அந்த ஸ்பாட்டுக்கு வந்து உதயநிதியை கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்ல தயாரானார். அரசு நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றார் உதயநிதி.
திமுக மகளிரணிச் செயலாளராகவும் இருக்கும் கனிமொழி அண்மையில் நடந்த பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார். தூத்துக்குடி எம்பியாகவும் இருக்கிறார் கனிமொழி. பிரதமரின் தேசிய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்வை மத்திய அமைச்சர்களோ, எம்.பி.க்களோ அல்லது மாநில அமைச்சர்களோதான் நடத்துவார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி மூலம் இந்த விழாவை துவக்கி வைத்ததுதான் தூத்துக்குடி திமுகவினரிடத்தில் பல்வேறு பேச்சுகளை எழுப்பியிருக்கிறது.அதுவும் கனிமொழியின் தொகுதியான தூத்துக்குடியில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது விவாதங்களை அதிகப்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘சில நாட்களுக்கு முன்பு வரை தூத்துக்குடியில்தான் இருந்தார் கனிமொழி. வார இறுதியில்தான் சென்னை சென்றார். இந்த நிலையில் தூத்துக்குடியில் மாரிசெல்வராஜ் தனது வாழை படத்தின் படப்பிடிப்பை உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பிலேயே உதயநிதிக்கு விமானப் பயணம், தங்குமிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
ஏற்கனவே திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பசும்பொன் என்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி பயணம் செய்யும் டிரண்டை தொடங்கிவிட்ட உதயநிதி… சினிமா விழாவுக்காக மட்டுமே தூத்துக்குடி சென்று வர வேண்டாம் என்று நினைத்தார். அந்த அடிப்படையில்தான் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில் உதயநிதியின் தூத்துக்குடி வருகையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உலக மீன் வள நாள் ஓர் வாய்ப்பாக அமைந்துவிட்டது. உடனடியாக கலெக்டரிடம் பேசி அரசு விழாவை ஏற்பாடு செய்து அதில் உதயநிதியை கலந்துகொள்ள வைத்துவிட்டார்.
இந்த பின்னணியில்தான் கனிமொழி தொகுதிக்கு வந்து சென்ற கலகத் தலைவன் என்று உதயநிதியின் தூத்துக்குடி வருகையை வைத்து திமுகவுக்குள்ளேயே இரு தரப்பினர் விவாதமாக்கி விட்டனர். தனது தொகுதிக்கு உதயநிதி சென்ற நவம்பர் 21 ஆம் தேதி தூத்துக்குடி தொகுதிக்கான ரயில்வே தேவைகளை வலியுறுத்தி சென்னையில், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சந்தித்தார் கனிமொழி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள ரயில்வே திட்டப்பணிகளை நிறைவுசெய்து தரும்படியும், ரயில் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அமைத்திடவும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினரோடு சேர்ந்து தென்னக ரயில்வே பொது மேலாளரை வலியுறுத்தினார் கனிமொழி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.’
ரஸ்னா’ நிறுவன தலைவர் மரணம் : 2 நாளுக்கு பின் வெளிவந்த தகவல்!
நீலகிரி மக்களவை வேட்பாளர் எல்.முருகன்: மோடி திட்டத்தை வெளியிட்ட அண்ணாமலை