வைஃபை ஆன் செய்ததும் முப்பெரும் விழா பற்றிய போட்டோகார்டுகள் இன்ஸ்டாகிராமில் வந்து விழுந்தன.
‘செப்டம்பர் 15 ஆம் தேதி முப்பெரும் விழாவுக்காக விருதுநகர் செல்லும் கட்சி நிர்வாகிகள் பலரும் தங்களது மாவட்டத்தில் அடுத்த மாவட்டச் செயலாளர் யார் என்பதைத்தான் முக்கிய டாப்பிக்காக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று டெக்ஸ்ட் செய்தது ஃபேஸ்புக் மெசஞ்சர்.
அவற்றைப் பார்த்த பிறகு மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “திமுகவில் எப்போதோ முடிந்திருக்க வேண்டிய உட் கட்சித் தேர்தல் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது.
மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குக் கீழே இருக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் கிட்டத்தட்ட தேர்தல் முடிந்து விட்ட நிலையில், இப்போது மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு தேர்தலும் அதையடுத்து மாநில தலைவர் பதவிக்கான தேர்தலும் முறைப்படி நடக்க வேண்டும்.
தமிழகம் முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் மாவட்டச் செயலாளர் இப்போது இருப்பவரே தொடர்வாரா அல்லது மாற்றப்படுவாரா என்ற கேள்விதான் அக்கட்சிக்குள் அலை அலையாய் வீசிக் கொண்டிருக்கிறது.
மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வரின் மருமகன் சபரீசன் தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் பச்சை, ஆரஞ்சு,சிகப்பு என்று மூன்று வகையான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் பச்சை பட்டியலில் இருப்பவர்கள் சிறப்பான செயல்பாடு கொண்டவர்கள் என்றும் ஆரஞ்சு நிறப் பட்டியலில் இருப்பவர்கள் பரவாயில்லை ரகம் என்றும், சிகப்பு நிறப் பட்டியலில் இருப்பவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்றும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இப்படி ஒருபக்கம் மாவட்டச் செயலாளர்கள் பற்றிய ஆய்வு நடந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே ஒரு பட்டியல் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
அதாவது சமீபத்தில் நடந்த இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டங்களில் பேசிய இளைஞரணி அமைப்பாளர்கள், ‘மாசெக்களாக இருக்கும் அமைச்சர்கள் உங்களுக்கு (உதயநிதி) நல்ல மரியாதை கொடுக்கிறார்கள்.
ஆனால் இளைஞரணி நிர்வாகிகளை மதிப்பதே இல்லை’ என்றெல்லாம் புலம்பினார்கள். அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உதயநிதி அந்த கூட்டங்களில் நிர்வாகிகளுக்கு உறுதியளித்து வந்தார்.
இந்த பின்னணியில் உதயநிதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாகவே ஒரு ஆய்வு தீவிரமாக நடந்தது.
அதாவது, ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான அதேநேரம் கட்சியில் துடிப்பாக பணியாற்றியவர்களை அடையாளம் கண்டு அப்போதைய திமுக தலைவரான கலைஞரிடம் பேசி அவர்களை மாவட்டச் செயலாளர்கள் ஆக்கினார்.
இப்போதைய மா.சுப்பிரமணியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர், வெள்ளக்கோவில் சாமிநாதன் என பலர் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டனர். இதன் மூலம் இளைஞரணியின் துடிப்பான வேகம் கட்சியின் பேரன்ட் பாடி எனப்படும் முக்கிய நிர்வாகக் கட்டமைப்புக்கு உதவியது.
அதேபோலத்தான் இப்போது இளைஞரணிச் செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது நம்பிக்கைக்கு உரிய அதேநேரம் கட்சியில் துடிப்பாக பணியாற்றும் சிலரை டிக் செய்து அவர்களை மாவட்டச் செயலாளர்களாக ஆக்க வேண்டும் என்று இப்போதைய தலைவர் ஸ்டாலினிடம் வற்புறுத்தியுள்ளார்.
இப்போதைய திமுக மாவட்டச் செயலாளர்கள் கணிசமானோர் 75 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு வரும் இளைஞர்களோடு இரண்டறக் கலந்து அவர்களை கட்சிப் பணியாற்ற விடாமல் தலைமுறை இடைவெளி இருக்கிறது. குறிப்பிட்ட சில மாசெக்களால் நடக்கவே முடியவில்லை.
எனவே அவர்களை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்து தாத்தா- பேரன் என்ற இடைவெளியை மாற்றி அண்ணன் தம்பி என்ற நிலைக்கு கட்சியைக் கொண்டுவர வேண்டும். அதற்கு இளைஞரணியில் தீவிரமாக செயல்படும் சிலரை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்பதுதான் உதயநிதியின் திட்டம்.
வடசென்னையில் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ., தூத்துக்குடியில் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஜோயல், மற்றும் தற்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களாக செயல்பட்டு வரும் செங்கல்பட்டு அப்துல் மாலிக், ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.( ராணிப்பேட்டை மாவட்டம்), ஈரோடு பிரகாஷ், கோவை சபரி கார்த்திகேயன், ராமநாதபுரம் இன்பா ரகு உள்ளிட்ட தற்போது இளைஞரணியில் பணியாற்றக் கூடிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு அவரவர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவேண்டும் என்பது உதயநிதியின் விருப்பம்.
உதயநிதி விரும்புகிறார் என்பதற்காக கட்சியின் தலைவர் ஸ்டாலின் செய்துவிட மாட்டார். ஏனெனில் இது மாவட்டச் செயலாளர் பதவி. அதனால் இந்த இளைஞரணி நிர்வாகிகளின் தகுதி, கட்சிப் பணி, அனுபவம் என பல அளவுகோல்களில் அவர்களை மதிப்பிட்டு அந்த மதிப்பீட்டு அறிக்கையையும் திமுக தலைவரும் முதல்வரும் தனது அப்பாவுமான ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார் உதயநிதி.
இந்த பட்டியலில் எத்தனை பேரை மாவட்டச் செயலாளர் ஆக ஸ்டாலின் செலக்ட் செய்யப் போகிறார் என்பது முப்பெரும் விழாவுக்கு பிறகுதான் தெரியும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
இந்தியாதான்… ‘ஹிந்தி’யா அல்ல!” அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!