“அப்பா… நான் தனியா இல்லை, நீங்க எப்பவும் என் கூட இருக்கீங்க”- கனிமொழியின் இன்ஸ்டா… காரணம் என்ன?  

அரசியல்

தமிழ்நாட்டின் துணை முதல்வராக  உதயநிதி நியமிக்கப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 1) ஆம் தேதி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட ஒரு பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 28 ஆம் தேதி திமுகவின் பவள விழா கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் ஆளுநர் மாளிகை ‘தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதியை நியமித்தும்,  அமைச்சர்களின் துறை மாற்றங்கள், புதிய அமைச்சர்களை சேர்த்தல், விடுவித்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் செய்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்” என்று செய்திக் குறிப்பு வெளியிட்டது.

அப்போதிலிருந்தே உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார்.  அதன் பின் திமுகவில் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,  மற்றும் அகில இந்திய அளவில் பலரும் அவரை வாழ்த்தி வருகிறார்கள். உதயநிதியும் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு தனது பாட்டி ராஜாத்தி அம்மையாரையும், அத்தை கனிமொழியையும் அவர்களின் இல்லத்துக்கே சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, “முதல்வர் அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு   பொறுப்பை வழங்கியிருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.

உதயநிதிக்கு ஏதும் அட்வைஸ் செய்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்கறதில்லை. முதலமைச்சர் யாருக்கு என்ன கொடுத்தால் சரியாக இருக்கும் என்று புரிந்துகொண்டுதான் கொடுத்திருக்கிறார்.

இந்த காலத்தில் யாருக்கும் அட்வைஸ் அவசியமில்லை. எல்லாருக்குமே என்ன பண்ணனும்னு தெரியும்,  உதயநிதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.

இந்த சூழலில் இன்று (அக்டோபர் 1)  கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டார். கனிமொழி மேடையில் பேசும்போது பக்கவாட்டில் கலைஞரின் இளவயது படம் இருக்கும் புகைப்படம் அது.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு, “அப்பா…நீங்க எப்பவும் என் கூட இருக்கீங்க. நான் தனியாக இல்லை…’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் திமுக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.  கட்சியும் ஆட்சியும் முழுதாக உதயநிதி கைகளுக்கு போய்விட்டது, கனிமொழி தனித்துவிடப்படுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லிவந்த  நிலையில்தான், ‘நான் தனியாக இல்லை… என்னுடன் அப்பா இருக்கிறார்’ என்ற ரீதியில் கனிமொழியின் இந்த இன்ஸ்டா பதிவு அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு!

30 ஆயிரம் இருக்கைகள், புத்தர் முதல் அண்ணா வரை… விசிக மாநாட்டு பணிகள் மும்முரம்!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *