வைஃபை ஆன் செய்ததும் திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா போட்டோக்களும், வீடியோக்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று (நவம்பர் 27) காலை 8 மணிக்கு சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கு சென்ற உதயநிதி தனது தந்தையார் முதலமைச்சர் ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரிடம் பிறந்தநாளை ஒட்டி ஆசி பெற்றார். உதயநிதிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். அதன்பிறகு அங்கேயே குடும்பத்தோடு டிபன் சாப்பிட்டு விட்டு… கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் உதயநிதி.
தாத்தா கலைஞரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி விட்டு பாட்டி தயாளு அம்மாளை வணங்கினார். மெரினாவில் இருக்கிற அண்ணா கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு பெரியார் திடலுக்கு சென்று பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திராவிடர் கழக தலைவர் கி வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் சி ஐ டி காலனியில் இருக்கும் தனது அத்தை கனிமொழியின் இல்லத்துக்கு சென்றார். நாடாளுமன்றம் நடப்பதன் காரணமாக கனிமொழி டெல்லியில் இருந்தார். அங்கே கலைஞர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, தனது பாட்டி ராஜாத்தி அம்மாளிடம் ஆசிபெற்றார் உதயநிதி.
இதற்கிடையில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
இவ்வாறு காலை 8 மணிக்கு தொடங்கிய தேடிச் சென்று வாழ்த்து பெறும் படலம் நிறைவு பெற்று காலை 11:45 மணிவாக்கில் தனது அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்துக்கு வந்தார் உதயநிதி. அங்கே உதயநிதியை தேடி வந்து வாழ்த்திட ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
ஏற்கனவே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் மிகப்பெரிய கூட்டத்தோடு குறிஞ்சி இல்லத்துக்கு படையெடுத்து வந்திருந்தனர். காலை 8 மணி முதல் அவர்கள் குறிஞ்சி இல்லத்தின் வாசலில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.
உதயநிதியின் குறிஞ்சி இல்லத்துக்கு பின்பக்கமாக அமைச்சர் அன்பில் மகேஷின் தென்பெண்ணை இல்லம் உள்ளது. அங்கிருந்து குறிஞ்சி இல்லத்துக்கு வருவதற்கு சிறப்பு பாதை ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையின் வழியாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் குறிஞ்சி இல்லத்துக்குள் சென்றனர்.
சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர் அணி நிர்வாகிகள் என குறிஞ்சி இல்லம் கூட்டத்தால் குலுங்கியது.
அமைச்சர்கள் தொடங்கி இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் நிர்வாகிகள் வரை சில மணி நேரங்கள் உதயநிதி வருகைக்காக குறிஞ்சி இல்லத்தில் காத்திருந்தனர்.
காலை 11:45 மணியிலிருந்து குறிஞ்சி இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து கடுமையான கூட்டத்திலும் அனைவரிடமும் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் உதயநிதி. பகல் 12 மணி வரை திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன், தனது இல்லத்துக்கும் உதயநிதி வருவார் என்று காத்திருந்திருக்கிறார். ஆனால் உதயநிதி குறிஞ்சி இல்லத்துக்கு திரும்பி தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார் என்ற தகவல் துரைமுருகனுக்கு கிடைத்தது. இதையடுத்து அவரே தனது இல்லத்தில் இருந்து கிளம்பி குறிஞ்சி இல்லத்துக்கு சென்று, அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடை ஏறி உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார்.
சில நிமிடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான எஸ். எஸ். பாலாஜி குறிஞ்சி இல்லத்துக்கு சென்று, உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அப்போது உதயநிதி, ‘அண்ணன் நல்லா இருக்காரா? எங்க இருக்காரு?’ என்று கேட்டுள்ளார். அண்ணன் என்று உதயநிதி கேட்டது விசிக தலைவரான திருமாவளவனைதான். ’இங்க தான் இருக்காரு… கொஞ்சம் உடம்பு சரியில்லை’ என்று பதில் அளித்துள்ளார் எஸ். எஸ். பாலாஜி.
தன்னைப் பற்றி உதயநிதி விசாரித்ததை அறிந்து கொண்ட திருமாவளவன், பிற்பகல் 2:30 மணி வாக்கில் எஸ். எஸ். பாலாஜியோடு புறப்பட்டு குறிஞ்சி இல்லத்துக்கு சென்று உதயநிதியை வாழ்த்தினார். திருமாவளவனே தன்னை தேடி வந்து வாழ்த்தியதில் உதயநிதிக்கு பெரும் மகிழ்ச்சி.
இவ்வாறு திமுகவின் மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் என இன்று மட்டும் சுமார் 20,000 பேர் குறிஞ்சி இல்லத்துக்கு திரண்டு உதயநிதியை வாழ்த்தியிருக்கிறார்கள். வாழ்த்திய தொண்டர்கள் அனைவருக்கும் குறிஞ்சி வளாகத்திலேயே பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது.
திமுகவின் தலைவர் பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் பொதுச் செயலாளர் துரைமுருகனே உதயநிதியை தேடிச்சென்று வாழ்த்திய காட்சியும்… கூட்டணி கட்சி தலைவர்களில் திருமாவளவன் நேரடியாக சென்று வாழ்த்திய காட்சியும் குறிஞ்சிக் கூட்டத்தின் இடையே பேசுபொருளாக இருந்தது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புயல் உருவாவதில் தாமதம் – ரெட் அலர்ட் வாபஸ்!
ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!