சென்னையில் 61 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றும், அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு பணிகள் நிறை பெற்றுள்ளது குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் 162 கி.மீ. நீளத்திலான கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலையாறு நீர்வழித்தடங்களும், 107.06 கி.மீ. நீளத்திலான 15 கால்வாய்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 53.42 கி.மீ. நீளத்திலான 33 கால்வாய்களும், 3,040 கி.மீ. நீளத்திலான 11,770 மழைநீர் வடிகால்களும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 237 கி.மீ. நீளத்திலான 42 மழைநீர் வடிகால்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ரிப்பன் வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதிஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை மாவட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நடப்பாண்டு மழைநீர் வடிகால் பணிகள், வடகிழக்கு பருவமழையின் போது இருக்க வேண்டிய தயார் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மெட்ரோ பணிகளும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருவதால், மழையின் போது மக்கள் பாதிப்பில்லாமல் இருப்பது, மின் தடை, பேரிடர் கால உபகரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “சென்னை மாநகர பகுதியில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து தெரிவித்தார்கள். கூவம் பகுதிகளை தூர்வார வேண்டுமென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தார்கள்.
இதுவரை 3040 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 61 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது.
320 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது. 45 நாட்களுக்குள் தூர்வாரும் பணிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்பதை அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்” என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் நாணய வெளியீடு… ராகுலை அழைக்காதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி!
’தமிழர்களிடம் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் இருக்கு’ : மத்திய அமைச்சர்