திமுக இளைஞர் அணிச் செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண்டு இரவு மாயவரத்தில் தங்கியவர் நேற்று மார்ச் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளைக்கு சென்றார்.
தாத்தா கலைஞர் வளர்ந்த இல்லத்தை பார்வையிட்டு,, பழைய நினைவுகளை அசை போட்டவர், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கடலூர் வழியாக சென்னை மார்க்கமாக பயணித்தார்.
நேற்று (மார்ச் 15) இரவு சுமார் 8 மணியளவில் கடலூர் மாநகரத்தை கடந்தபோது மாநகர செயலாளர் ராஜா, அவரது மனைவியும் மாநகர மேயருமான சுந்தரி மற்றும் கட்சியினர் கூடி நகர திமுக அலுவலகம் எதிரில் வரவேற்பு கொடுக்க காத்திருந்தனர்.
அமைச்சர் உதயநிதி கார் வந்ததும், ’வருங்கால முதல்வரே’ என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது கார் கண்ணாடியை இறக்கிய உதயநிதி தன்னை நோக்கி நீண்ட கரங்களில் இருந்து சால்வைகளை வாங்கத் தொடங்கினார்.
அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் சால்வையை கொடுக்க முந்திய போது மேயருடன் வந்தவர்கள் சிலர் ரோஜா மலர்களை அள்ளி உதயநிதியை நோக்கி வீசினார்கள்.
ரோஜா மலர்களில் இருந்து தெறித்த தண்ணீர் உதயநிதி முகத்திலும் சட்டையிலும் துளித் துளிகளாக விழுந்தன.
கண்ணுக்குள் ரோஜா தண்ணீர் பட்டதால் சடக்கென கண்களை மூடிய உதயநிதி… கார் கண்ணாடியை உயர்த்திக்கொண்டு காரை வேகமாக எடுக்க சொன்னார்.
உதயநிதி கார் சீறி பாய்ந்ததும் , சால்வை மற்றும் பூங்கொத்து வைத்திருந்த நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் ஏமாந்தனர்.
–வணங்காமுடி
மகப்பேறு விடுமுறையில் சென்ற பெண்ணை நீக்கிய மெட்டா!
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!