உதயநிதியின் புதிய டீம்: அடுத்த ஆட்டத்துக்கான ரிகர்சல்!   

அரசியல்

திமுக பொதுக்குழு முடிந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை இன்று (நவம்பர் 23) அறிவித்துள்ளார்  அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன்.

இந்த வகையில் மீண்டும் இளைஞரணிச் செயலாளர் பதவியில் தொடர்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இளைஞரணி துணைச் செயலாளர்கள் பட்டியலில் ஏற்கனவே இருந்தவர்களில் தூத்துக்குடி ஜோயல் மட்டும் மீண்டும் துணைச் செயலாளர் ஆகியிருக்கிறார். அவரையடுத்து புதிய துணைச் செயலாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு,  திருவாரூர் இளையராஜா, செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் அப்துல் மாலிக், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், திருவேற்காடு பிரபு, கிருஷ்ணகிரி சீனிவாசன், மதுரை ராஜா, நாமக்கல் ஆனந்தகுமார் ஆகியோர்  துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.   

   அறிவிப்பு வந்தபோது உதயநிதி தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ‘மீண்டும் நீங்கள் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்களே’ என்று கேட்டபோது, ‘அப்படியா? நீங்க சொல்லிதான் எனக்குத் தெரியும். இதை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே காரில் ஏறினார். 

செய்தியாளர்கள் சொல்லித்தான் அறிவிப்பு வந்திருப்பது தெரியும் என்று உதயநிதி சொன்னாலும்… புதிய இளைஞரணிக்கான பேனலை [panel] அவர் ஏற்கனவே முடிவு செய்து தன் அப்பாவும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் கொடுத்திருந்தார். அந்த பட்டியலை பார்க்கும்போது, கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியிட்ட, ‘டிஜிட்டல் திண்ணை: அப்பாவிடம் உதயநிதி கொடுத்த மாசெக்கள் பட்டியல்’ என்ற செய்திதான் நமக்கு நினைவுக்கு வந்தது.

அந்த செய்தியில்,  “  திமுகவின் உட்கட்சித் தேர்தலில் முக்கிய கட்டமான மாசெக்கள் தேர்தலின் போது உதயநிதி…  ‘இளைஞரணியில் சிறப்பாக செயல்படும் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இப்போதைய திமுக மாவட்டச் செயலாளர்கள் கணிசமானோர் 75 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்கு வரும் இளைஞர்களோடு இரண்டறக் கலந்து அவர்களை கட்சிப் பணியாற்ற விடாமல் தலைமுறை இடைவெளி இருக்கிறது. குறிப்பிட்ட சில மாசெக்களால் நடக்கவே முடியவில்லை.

எனவே அவர்களை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்து தாத்தா- பேரன் என்ற இடைவெளியை மாற்றி  அண்ணன் தம்பி என்ற நிலைக்கு கட்சியைக் கொண்டுவர வேண்டும். அதற்கு  இளைஞரணியில் தீவிரமாக செயல்படும் சிலரை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்பதுதான் உதயநிதியின் திட்டம். 

வடசென்னையில் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ., தூத்துக்குடியில் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் ஜோயல், மற்றும் தற்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களாக செயல்பட்டு வரும் செங்கல்பட்டு அப்துல்  மாலிக்,  ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.( ராணிப்பேட்டை மாவட்டம்),  ஈரோடு  பிரகாஷ், கோவை  சபரி கார்த்திகேயன், ராமநாதபுரம் இன்பா ரகு உள்ளிட்ட தற்போது இளைஞரணியில்  பணியாற்றக் கூடிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு அவரவர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவி  வழங்கப்படவேண்டும் என்பது உதயநிதியின் விருப்பம். இந்த பட்டியலை திமுக தலைவரிடம் கொடுத்திருக்கிறார்” என்று அந்த செய்தியில் எழுதியிருந்தோம்.

இன்று (நவம்பர் 23)  வெளியிடப்பட்ட உதயநிதியின் புதிய இளைஞரணி துணைச் செயலாளர்கள் பட்டியலில் மேற்குறிப்பிட்டவர்கள்  இருப்பது கவனிக்கத் தக்கது. 

இதுகுறித்து இளைஞரணி வட்டாரத்தில் விசாரித்தோம்.   “இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்கிறார் உதயநிதி. ஏதோ வந்தார், காமெடியாக பேசினார் போனார் என்று அவரைப் பற்றி நினைத்தால் அது தவறு. ஒவ்வொரு  மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளிடம் இருந்து மினிட்ஸ் புக்குகளை வாங்கி அவரே  சரிபார்க்கிறார்.  அவர்களது சமூக தள பக்கங்களை இவரே போய் ஆராய்கிறார். இப்படிப்பட்ட ஆய்வுகளின் மூலமாகத்தான் சிலரை அவர் மாவட்டச் செயலாளர்கள் ஆக்க முயற்சித்தார்.

ஏற்கனவே மாநில துணைச் செயலாளராக இருந்த அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டார். அவரைப் போல் தூத்துக்குடிக்கு ஜோயல், ஈரோடுக்கு பிரகாஷ், செங்கல்பட்டுக்கு  அப்துல் மாலிக்,  ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.( ராணிப்பேட்டை மாவட்டம்),  ஈரோடு  பிரகாஷ், கோவை  சபரி கார்த்திகேயன், ராமநாதபுரம் இன்பா ரகு  ஆகியோரை மாவட்டச் செயலாளர்களாக தரமுயர்த்த நினைத்தார்  உதயநிதி. 

இதற்காகவே  இம்மாவட்டங்களின் மாசெக்களாக இருக்கும் சீனியர்களை  பத்து மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் எந்த மாசெவும் தனது பதவியை விட்டுக் கொடுக்க சம்மதிக்கவில்லை.  ஸ்டாலினும் இப்போதைக்கு யாரையும் மாற்ற வேண்டாம் என பெரும்பாலும் அப்படியே நீடிக்க விட்டார்.

ஆனாலும் தான் ஆராய்ந்து எடுத்த ஆளுமைகளை தன் அணியில் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தார் உதயநிதி. ஏற்கனவே மாநில துணை செயலாளர்களாக இருந்தவர்களில் தூத்துக்குடி ஜோயலை மட்டுமே தக்க வைத்திருக்கிறார் உதயநிதி. தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில்  தான் கவுன்சிலர் விருப்ப மனு கொடுத்த வார்டு காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டபோதும்,  அதுபற்றி உதயநிதியிடம் ஏதும் முறையிடவில்லையாம் ஜோயல்.  இளைஞரணி வேலைகளைத் தொடர்ந்து தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் அவரை தனக்கு அடுத்த இடத்தில் அதாவது இளைஞரணியில் நம்பர் 2 என்ற இருக்கையில் அமர வைத்திருக்கிறார் உதயநிதி. 

மேலும்  மாசெக்கள் தேர்தலில் தான் பரிந்துரைத்தவர்களுக்கு அப்போது கட்சியில் வாய்ப்பு இல்லாததால் அவர்களை இப்போது மாநில துணைச் செயலாளர் ஆக்கியிருக்கிறார்.  இவ்வாறு கட்சிக்கு உழைப்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களை தன் சக்திக்கு முடிந்த அளவு உயர்த்திவருகிறார் உதயநிதி.  எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த இளைஞரணி பேனல் என்பது எதிர்கால திமுகவின் மாசெக்கள் பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கும்” என்கிறார்கள் அன்பகத்தில் திரண்டிருப்போர்.

வேந்தன்

மீனவர்கள் போராட்டம்: கேரளாவிலும் ஒரு தூத்துக்குடியா?

எடப்பாடி ஆளுநர் சந்திப்பு : தங்கம் கிளப்பும் டவுட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.