திமுக ஆட்சி அமைத்து சில மாதங்களிலேயே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என பல்வேறு அமைச்சர்கள் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட போதெல்லாம் மேம்போக்காக ஒரு பதில் சொல்லி சிரிப்போடு கடந்து விடுவார்.
லேட்டஸ்டாக ஏப்ரல் 21ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “நீங்கள் அமைச்சராக துணை முதலமைச்சராகவோ ஆக வேண்டுமென அமைச்சர்கள் கூறி வருகிறார்களே? இது முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளதா?’ என்று உதயநிதியிடம் கேட்டனர் செய்தியாளர்கள்.
வழக்கம்போல ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே, ‘நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்க கருத்து என்ன?’ என்று நிருபர்களிடமே திருப்பி கேட்டார் உதயநிதி. ‘நீங்கள் அமைச்சராக வரவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்’என்று நிருபர்கள் சொல்ல, ‘சரி.. இதை தலைவர் கிட்ட சொல்லிடுறேன்”
என்று மீண்டும் சிரித்தார் உதயநிதி.
இந்தப் பின்னணியில்தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று 2021 மே 7ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.
கலைஞர் மறைவிற்கு பிறகு தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு நிகழ்வை பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட எண்ணியிருந்தனர் திமுகவினர். ஆனால் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், திமுகவினரால் இந்த வரலாற்று வெற்றியை சாதாரணமாகக் கூட கொண்டாட முடியவில்லை.
இந்தப் பின்னணியில் திமுக ஆட்சி அமைத்து முதல் வருடம் நிறைவுற இருக்கும் 2022 மே 7ஆம் தேதியை இரட்டை கொண்டாட்ட நாளாக ஆக்க முடிவு செய்திருக்கிறது திமுக தலைமை.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம். எல். ஏ. வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்காக மே 7-ஆம் தேதி தான் குறிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து திமுக உயர்மட்ட வட்டாரங்களில் விசாரித்தபோது,
“கடந்த நான்கு மாதங்களாகவே உதயநிதியை அமைச்சர் ஆக்குவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கலைஞர் உருவாக்கிய அஞ்சுகம் பிக்சர்ஸ், முரசொலி அறக்கட்டளையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பங்குகள் அவர்கள் மனம் கோணாதபடி பேசப்பட்டு உதயநிதி பெயருக்கு மாற்றப்பட உள்ளன. விரைவில் கலைஞர் தொலைக்காட்சி பங்குகளும் உதயநிதி வசம் வர உள்ளன.
இதன் அடுத்த கட்டமாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு கொண்டாட்டத்தோடு உதயநிதி மாண்புமிகுவாகும் நிகழ்வும் சேர்ந்து பெருங்கொண்டாட்டமாக மாற ரகசிய முன்னேற்பாடுகள் நடக்கின்றன.
அடுத்த கேள்வி உதயநிதிக்கு வழங்கப்படும் பொறுப்புகள் என்னென்ன?
அதிகாரம் மிக்க பொறுப்புகள் பெற வேண்டும் என உதயநிதியின் நலன் விரும்பிகள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள வளமான துறைகள் என்று கருதப்படும் துறைகளை விட்டுவிட்டு இளைஞர்கள் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு துறையான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை போன்ற அமைச்சகத்தை உதயநிதியிடம் கொடுப்பது என்று ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது. சாதாரண துறையாக இருந்தாலும் அதை சரித்திரத் துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான் இதன் பின்னால் உள்ள காரணம். மேலும் உதயநிதி அமைச்சரான பிறகு அவர் பயன்படுத்துவதற்காக புத்தம் புது கார் வாங்கவும் உத்தரவாகிவிட்டது.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற அதே மே 7ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.
கட்சி, ஆட்சி இரண்டிலும் உதயநிதியின் ஆதிக்கம் ஏற்கனவே இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதிகாரப்பூர்வ ஆதிக்கத்திற்கான தொடக்கப் புள்ளியாக இது அமைய இருக்கிறது” என்கிறார்கள்.
**வேந்தன்**