வைஃபை ஆன் செய்ததும் செந்தில்பாலாஜி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு பற்றிய செய்தி இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில்பாலாஜியை கஸ்டடி எடுத்து விசாரிக்க 8 நாட்கள் கொடுத்தும், அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவரை அமலாக்கத்துறையால் கஸ்டடி எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜியை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செய்யப்பட்ட இந்த மேல் முறையீடு 21 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்… செந்தில்பாலாஜி மீது திடீரென மத்திய அரசின் புலனாய்வுத் துறைகள் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன் என்று திமுகவின் சீனியர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே டெல்லி தொடர்பான பிரச்சினைகள் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் சீனியர்கள் முன் வைக்கும்போது, ‘எல்லாத்தையும் மாப்பிள்ளை பாத்துக்குவாரு… ஒண்ணும் பிரச்சினை இல்லைனு மாப்பிள்ளை சொல்லியிருக்காரு’ என்றே முதல்வர் பதில் சொல்லி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
திமுக ஆட்சி அமைந்தத்தில் இருந்து இதுவரை இரண்டு, மூன்று முறை அமித் ஷாவையே சபரீசன் நேரடியாக சந்தித்திருப்பதாகவும், அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் வட்டாரத்தினரோடு சபரீசன் தரப்பினர் தொழில் ரீதியான தொடர்பில் இருப்பதாகவும் திமுக மேல் மட்டத்திலேயே பேச்சு உண்டு.
அதனால், அரசியல் ரீதியான கருத்து தாக்குதல்கள் இருக்குமே தவிர இவ்வளவு சீரியசான பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்று திமுக சீனியர்கள் நம்பி வந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை தூக்கியதில் காட்டிய வேகம்தான் திமுக மேல்மட்டத்தில் உள்ள பலரையும் அவ்வாறு விவாதிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து திமுக டெல்லி வட்டாரத்தில் பேசியபோது சில தகவல்கள் கிடைக்கின்றன. அதாவது மாப்பிள்ளை சபரீசன் டெல்லி தொடர்பான விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அதுவரைக்கும் ஓரளவுக்கு எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தன. ஆனால் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி டெல்லியில் அமைச்சர் உதயநிதி, பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.
சுமார் நாற்பது நிமிடங்கள் வரை நடைபெற்ற அந்த சந்திப்பு திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. திமுக தலைவரின் மகன் அதுவும் ஒரு ஜூனியர் அமைச்சர் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் ஒன் டு ஒன் சந்திப்பது ஏன் என்று காங்கிரஸ் தேசிய தலைமையே உற்றுப் பார்த்து விசாரிக்க ஆரம்பித்தது.
திமுகவுக்கு வெளியே இப்படி என்றால்… திமுகவுக்குள் குறிப்பாக முதல்வரின் குடும்பத்துக்குள் உதயநிதி- மோடி சந்திப்பு சபரீசன் வட்டாரத்தில் சற்று குழப்பத்தையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. டெல்லி விவகாரங்களை சபரீசன் கையாண்டு கொண்டிருக்கும் நிலையில்… திடீரென உதயநிதி ஏன் இதற்குள் வருகிறார் என்பதுதான் அந்த குழப்பம். அதற்கேற்ப சபரீசன் வட்டாரத்தோடு டச்சில் இருக்கும் அமித் ஷா வட்டாரத்தினர், ‘ஏன் அவசரப்பட்டு மோடியை சந்திச்சிருக்காரு உதயநிதி? இது சரியா தோணலையே?’ என்று கேட்டிருக்கிறார்கள். அப்போதே சபரீசன் தனது டெல்லி லாபியை கொஞ்சம் லிமிட் படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் மே 16 ஆம் தேதி செந்தில்பாலாஜிக்கு எதிரான தீர்ப்பு வர அதுகுறித்து முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள் திமுக சீனியர்கள். வழக்கம்போல அவரும், ‘மாப்பிள்ளை பாத்துப்பாரு’ என்று சொல்லிவிட்டார். ஆனால் இம்முறை மாப்பிள்ளை சபரீசன் டெல்லி தொடர்புகளை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் ஏற்கனவே உதயநிதி வழியாக ஒரு டெல்லி லாபி இருக்குமோ என்ற சந்தேகத்தில் சபரீசனின் டெல்லி தொடர்புகள் சில சைலன்ட் ஆகிவிட்டன அல்லது சபரீசனே கொஞ்சம் குறைத்துக் கொண்டார். இந்த இடைவெளியால்தான் இப்போது செந்தில்பாலாஜி விவகாரத்தை டெல்லி வேகப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
ஏற்கனவே செந்தில்பாலாஜியின் தம்பியும் ஒருபக்கம் டெல்லி தொடர்புகளைக் கொண்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில்… உதயநிதி -சபரீசன் ஆகியோரிடையே ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் உரசல் திமுகவின் டெல்லி லாபியை தொய்வடையச் செய்திருக்கிறது என்கிறார்கள் திமுகவின் சீனியர்கள்.
செந்தில்பாலாஜி கைதுக்குப் பிறகு சபரீசன் வட்டாரத்தினர் டெல்லி தொடர்புகளை விசாரித்தபோது, ‘இன்னும் சில மாசங்களுக்கு எதுவும் நடக்காது. இதே நிலைதான் தொடரும்’ என்று சொல்லிவிட்டதாக தகவல்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
நேதாஜியை மையமாக வைத்து உருவான ’ஸ்பை’: ரிலீஸ் எப்போது?
’சமோசா சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம்’: ஆனா ஒரு கண்டிஷன்!