“மழைநீர் வடிந்ததுதான் வெள்ளை அறிக்கை” என்ற உதயநிதியின் பதில் அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் மழை நீர் வடிந்துவிட்டது. இதுதான் வெள்ளை அறிக்கை” என்று பதிலளித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று (அக்டோபர் 17) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்தது. இன்று கூட அதி கன மழை பெய்யும் என்று தெரிவித்தது. ஆனால் எந்த மழையையும் காணோம் வெயில்தான் பிரகாசமாக அடிக்கிறது.
குறைந்த அளவு மழை பெய்தபோதும் சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்ததை காண முடிந்தது. ராயபுரம், ஆர்.கே.நகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், பெருங்குடி, கொளத்தூர், கோயம்பேடு என பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. மக்கள் சிரமப்பட்டனர். ஆனால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் தண்ணீர் தேங்கவே இல்லை என பொய் சொல்கிறார்கள்.
மழை பெய்தால் ஒரு சொட்டு நீர் தேங்காது என்றார்கள். மேயரும் சொன்னார். ஆனால் உண்மை நிலை தெரியவந்துவிட்டது.
அதிமுக ஆட்சியில் மழை நீர் வடிகால் பணிகளுக்கு திட்டம் தீட்டி, உலக வங்கி, ஜெர்மன் வங்கிகளிடம் நிதி பெற்று சென்னையில் 2400 கி.மீ தூரத்திற்கு பணிகள் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சி முடிவுறும்போது 1240 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பணிகளை நிறைவு செய்தோம்.
எஞ்சிய பணிகளை இந்த திமுக ஆட்சியில் நிறைவு செய்யவில்லை. எங்கள் ஆட்சியில் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணியை உடனடியாக நிறைவேற்றியிருந்தால் இன்று மழை வெள்ளம் தேங்கி இருக்காது” என்று கூறினார்.
மேலும் அவர், “வெள்ள நீர் வேகமாக வடிவதற்காக கூவம் , அடையாறு கரையோரம் இருந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை புதிய கட்டடம் கட்டி அங்கு குடியேற்றினோம். 40 கி.மீ நீளம் கொண்ட 30 கால்வாய்களை எங்கள் ஆட்சியில் தொடர்ந்து தூர்வாரினோம். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசு தூர் வாராத காரணத்தால் தான் இன்று தண்ணீர் தேங்கியதற்கு காரணம்.
வெள்ள நீர் தேங்காமல், தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம்.
ஆனால் அதை வெளியிடவில்லை. இதை கேட்டால் சென்னையில் வெள்ளநீர் வடிந்து போய்விட்டது. இதுதான் வெள்ளை அறிக்கை என்று துணை முதல்வர் சொல்வது அவரது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. விளையாட்டுத்தனமாக இருக்கிறார். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். அதை கொடுப்பது அரசின் கடமை” என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “மழை காலத்தின் போது அதிமுக ஆட்சி காலத்தில் அந்தந்த துறை அமைச்சர்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்படும். ஆனால் திமுக ஆட்சியில் அனைத்து அமைச்சர்களின் இலாகாவையும் துணை முதலமைச்சரே கவனிக்கிறார்.
மின்சாரம், சுகாதாரம், வருவாய் , பொதுபபணி , நீர்வளம் என அனைத்து துறைகளின் பணியையும் உதயநிதியே செய்கிறார். மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்னென்ன செய்ய வேண்டும் என்று அனுபவ ரீதியாக தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் போது, ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதியை முன்னிலைப்படுத்துகிறார்கள். மற்ற அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி இருந்தால் வெள்ள நிவாரண பணிகள் விரைவாக முடிந்திருக்கும்” என்றார்.
5 ஆண்டு சென்னை மேயராக இருந்து ஸ்டாலின் செய்தது என்ன என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் மழைநீர் வடிகால் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரயில் டிக்கெட் புக் பண்றீங்களா… உங்களுக்குத்தான் இந்த அப்டேட்!