வைஃபை ஆன் செய்ததும், திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடந்த 23 அணிகளின் நிர்வாகிகள் கூட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவில் இருக்கும் 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் டிசம்பர் 28 ஆம் தேதி கூட்டினார். அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அணிகளின் மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
திமுகவில் அணிகள் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வந்த போதும் இளைஞரணியைத் தவிர வேறு அணிகள் ஏதும் ஆக்டிவ்வாக இருந்ததில்லை. மேலும் பல அணிகளுக்கு மாவட்ட அமைப்பில் கூட நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்படாத நிலைமைதான் இருந்தது. இந்த நிலையில் இப்போது கட்சியின் மொத்தமுள்ள 23 அணிகளுக்கும் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகளும் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்று அணிகள் கூட்டத்தில் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டம் தொடங்கியவுடன் முதலில் பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது, ‘பொதுவாழ்வில் இருப்பவர்கள் சூடு சொரணை பற்றி யோசிக்கக் கூடாது. எனவே வரும் தேர்தலை எதிர்கொள்ள நாம் எல்லா வகையிலும் தயாராக வேண்டும்’ என்றார். பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசும்போது, ’பல அணிகள் களத்தில் செயல்படவில்லை என்பதே நிலவரமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு அணியிலும் உரிய நிர்வாகிகள் ஒவ்வொரு அளவிலும் நியமிக்கப்பட வேண்டும். நிர்வாகிகள் ஒப்புதலில் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அணியிலும் முழுமையாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் அவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். 234 தொகுதிகளிலும் அணிகளின் நிர்வாகிகளுக்கு தேர்தல் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும்’ என்றும் உத்தரவாதம் அளித்திருக்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் பேசிய பின் 23 அணிகளின் செயலாளர்களும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘அணி நிர்வாகிகள் செயல்பாடுகளில் இளைஞரணி எப்போதுமே வேகமாக இருக்கிறது. என் அணியில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது. மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் என்று தலைவர் சொன்னார். அணி செயலாளர் என்ற முறையில் எங்களது வேண்டுகோளையும் தலைவர் பரிசீலிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார். அதன் பின் பல அணிகளும் பேசினார்கள்.
கூட்டம் முடிந்த பிறகு இளைஞரணி நிர்வாகிகளிடம் தனியாக ஒரு ஆலோசனையும் நடத்தியுள்ளார் உதயநிதி. அந்த ஆலோசனையில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி பேசப்பட்டிருக்கிறது. பொதுவாகவே அணிகளின் மாவட்ட நிர்வாகிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் அணிகளின் மாநில நிர்வாகிகள் அறிவிப்பார்கள். அதாவது தங்களது மாவட்டத்தில் ஒவ்வொரு அணிக்கும் யார் யார் நிர்வாகிகள் என்று மாவட்டச் செயலாளர்களே விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இறுதிப் பட்டியலை தயார் செய்து அணியின் மாநில தலைமைக்கு அனுப்புவார்கள். அதை வெளியிடுவதுதான் அணித் தலைமைகளின் வேலையாக இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது ஒருமுறை தானே மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை நேர்காணல் செய்து நியமனம் செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேர்காணல்களை நடத்தினார். அப்போது கூட மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைப்படியே பெரும்பாலான மாவட்டங்களுக்கு இளைஞரணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இப்போது உதயநிதி புதிய ஸ்டைலை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார். இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம், அல்லது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களிடம் அல்லது அன்பகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெறலாம். முரசொலியில் வெளியான விண்ணப்பத்தை நகல் எடுத்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டச் செயலாளர், மாவட்ட அமைப்பாளர் அல்லது அன்பகத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும். டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும் என்று உதயநிதியே கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். நேர்காணல்கள் அன்பகத்தில் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.
இதுவரை வழக்கமாக மாசெக்களிடம் இருந்து அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல்தான் அன்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்த முறை கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி காலை ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தாங்கள் பெற்ற மொத்த விண்ணப்பங்களையும் சீல் வைத்து அன்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். ஆக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை உதயநிதியே நேர்காணல் வைத்து நியமிக்க இருக்கிறார். மாநில துணைச் செயலாளர்கள் பதவி நியமனத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் செய்த சிபாரிசுகளை ஏற்கனவே புறந்தள்ளிய உதயநிதி, இப்போது மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் விஷயத்திலும் மாவட்டச் செயலாளர்களுக்கு எந்த பங்கும் இல்லாதவாறு செய்துவிட்டார்.
ஆக தனக்கு முழுமையான நம்பிக்கையான விசுவாசமான ஒரு புதிய டீமை தமிழ்நாடு முழுதும் மட்டுமல்ல வெளி மாநிலங்களிலும் உருவாக்கும் வகையிலேயே உதயநிதி இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் நியமனத்தையும் முழுக்க முழுக்க தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர்கள் மத்தியில் இப்போது விவாதமாக இருக்கிறது. விரைவில் நேர்காணல்களை நடத்தி முழுக்க முழுக்க உதயநிதியின் இளைஞரணி உருவாகும், அதுவே எதிர்கால திமுகவாகும் என்கிறார்கள் இளைஞரணி நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
துணை முதல்வர் உதயநிதி: அன்பில் மகேஷ் குஷி பேச்சு!
புரட்சிப் பெண்ணான புதுவை ஆட்சியர்: குவியும் பாராட்டுகள்!