உதயநிதி ஒரு கத்துக்குட்டி, அதிமுகவை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். Edappadi Palaniswami slams udhayanidhi
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மஹாலில் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது.
அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மகளிரணி செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அனைவரும் சிறப்பாக கட்சி பணி ஆற்றிட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையே குலுங்குகின்ற அளவிற்கு பொன்விழா மாநாடு நடைபெற்றது. அதிமுக வரலாற்றிலேயே 15 லட்சம் பேர் கலந்துகொண்டு வெற்றி மாநாடாக நடத்தி காட்டினோம்.
எதிரிகள் அஞ்சுகிற அளவுக்கு நடந்து முடிந்தது. அந்த மாநாட்டை பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் விமர்சித்து பேசினார். அதிமுக மாநாடு போல எங்கள் மாநாடு இருக்காது. சேலத்தில் நடைபெறுகிற திமுக இளைஞரணி மாநாடு ஒரு எடுத்துக்காட்டு மாநாடாக இருக்கும் என்று சொன்னார்.
அவர் சொன்னதுதான் மூன்று முறை அந்த மாநாடு தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவை விமர்சிக்கும் போதே உங்களுக்கு இந்த பாதிப்பு. அவருக்கு நாவடக்கம் தேவை. அரசியல் கத்துக்குட்டியாக இருந்து கொண்டு அதிமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்த கட்சியாலும் அதிமுக மாநாட்டை வெல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக நடந்தது. மாநாட்டுக்கு வருவதற்கு பேருந்துகள், வாகனங்கள் கிடைக்கவில்லை. வாகனங்கள் இருந்திருந்தால் அந்த மதுரை மாநகரே தாக்குபிடித்திருக்காது.
இன்னும் 10 லட்சம் பேர் கூடுதலாக கலந்திருப்பார்கள். அந்த வாகனங்களை எடுக்க முடியாத செய்த அரசுதான் இந்த விடியா திமுக அரசு. முறையான பாதுகாப்பும் வழங்கவில்லை.
அதிமுக மாநாட்டை பற்றி விமர்சிக்க உதயநிதிக்கு தகுதியில்லை. எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்கவோ, ஒடுக்கவோ, முடக்கவோ முடியாது.
தீய சக்தி திமுகவை அழிப்பதுதான் அதிமுகவின் முதல் கடமை என்று எம்.ஜி.ஆர் இந்த கட்சியை ஆரம்பித்தபோது சொன்னார்.
அதிமுக மக்களுக்காக உருவாக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்கரை ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்தோம்.
எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் அதிமுக மக்களுக்காக பணியாற்றும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.
எத்தனை கட்சிகள் இருந்தாலும் சோதனைக்கு மேல் சோதனையை கண்ட கட்சி அதிமுக. எத்தனை வழக்குகள்… அத்தனை வழக்குகளிலும் நீதி, தர்மம், உண்மை வென்றது. இதுதான் சரித்திரம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரஜினிகாந்தின் முக்கிய முடிவு… தள்ளிப்போன லால் சலாம் ரிலீஸ்!
விருந்துல நல்லி எலும்பு கறி போடல… கூட்டுங்கடா பஞ்சாயத்தை… நின்று போன திருமணம்!
Edappadi Palaniswami slams udhayanidhi