வைஃபை ஆன் செய்ததும் டெல்லியில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த போட்டோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. தொடர்ந்து சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட வீடியோக்களும் வந்து விழுந்தன. Udayanidhi invited Modi
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 19ஆம் தேதி தொடங்க இருக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவுக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்தார் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி.
‘பிரதமரை சந்தித்து தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளின் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை அளித்ததில் மகிழ்ச்சி. பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக வெள்ள நிவாரண நிதி பற்றிய கோரிக்கையை வலியுறுத்தினேன். அவரும் தமிழகத்தின் கோரிக்கை பற்றி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் சில தமிழ்நாடு தொடர்பான பொதுவான விஷயங்கள் பற்றி பேசினோம் என்று உதயநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமரை சந்தித்த கையோடு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து விட்டு சென்னை புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த முக்கியமான சந்திப்பு நடந்த இதே ஜனவரி 4ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டுக்கு தேவையான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க கோரியும், வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே இன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனோடு காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இடையே உதயநிதி மோடி சந்திப்பு குறித்தும் கூட்டணி கட்சி தலைவர்களிடையே விவாதம் நடந்துள்ளது. இது பற்றி திமுக கூட்டணி கட்சிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ‘கடந்த டிசம்பர் 3, 4 தேதிகளில் இருந்து டிசம்பர் மாதத்தில் பெருமளவு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது தமிழகம். ஆனால் முழுதாக ஒரு மாதம் ஆகியும் இப்போது வரை மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட சிறப்பு நிதி வரவில்லை. மாநில பேரிடர் நிதிக்கு தரவேண்டிய தவணையைத் தான் அளித்துள்ளார்கள்.
சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கிய போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்பு கொண்டு பாதிப்புகள் பற்றி விளக்கினார். அதன்பிறகு உடனடி நிவாரணம் கேட்டு கடிதம் எழுதினார், அதன்பிறகு வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங்கிடமும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன் பிறகு கடிதங்கள் எழுதினார் டிசம்பர் 19 டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாடு வெள்ள பாதிப்புகள் பற்றி விளக்கி நிவாரண நிதி வேண்டி கோரிக்கை அளித்தார். அதன் பிறகு தூத்துக்குடிக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு 72 பக்க கோரிக்கை மனுவை அளித்தார். அதிலும் உடனடி நிவாரண நிதி பற்றி வலியுறுத்தப்பட்டிருந்தது. இவையெல்லாம் தாண்டி ஜனவரி 2ஆம் தேதி திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியிடம் நேரிலும் நிவாரண நிதி பற்றி வலியுறுத்தினார் ஸ்டாலின்.
இவ்வளவு தூரம் நேரிலும் கடிதங்கள் மூலமும் தொலைபேசி உரையாடல்கள் மூலமும் வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு ஒரு ரூபாய் கூட சிறப்பு நிதி தரவில்லை. இந்த சூழ்நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைப்பதற்கு பிரதமர் மோடியை அழைப்பது அவசியம் தானா என்ற கேள்வி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டிருக்கிறது இதுபற்றி முதலமைச்சரிடம் எப்படி சொல்வது என்ற தயக்கமும் அவர்களிடம் இருக்கிறது.
2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்தன. பாஜக ஆட்சி செய்யும் அந்த மாநிலத்தில் கூட பிரதமர் மோடியை அழைக்காமல் மாநில முதல்வர் சௌகான் தான் தொடக்க விழாவையும் நிறைவு விழாவையும் நடத்தினார்., அதேபோல மோடியை அழைக்காமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினே இந்த விழாக்களை துவக்கி வைத்தால் ஸ்டாலினுடைய இமேஜ் இன்னும் உயர்ந்திருக்குமே என்ற கேள்வி திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா?
சொத்து வழிகாட்டு மதிப்பீடு: அரசின் சுற்றறிக்கை ரத்து!
Udayanidhi invited Modi