நீட் தேர்வுக்கு எதிரான உதயநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் 5 மணி வரை திமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“நீட் தேர்வுக்கு எதிராக பிரதமர் மோடி வீட்டின் முன்பு போராடுவோம் வாருங்கள். அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மறுபக்கம் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அதில் திமுகவின் உண்ணாவிரதம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது. உதயநிதி ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார்.
2010ல் டிசம்பர் 21 அன்று மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நீட் தேர்வு குறித்து நோட்டிஃபிகேஷன் வெளியிட்டது. அப்போது மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி.காந்தி செல்வன் இணையமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் நீட் தேர்வு வந்தது. இது ரெக்கார்டு. யாராலும் மறைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது.
இன்று எவ்வளவு ஏமாற்று வேலை காட்டுகிறார்கள். உண்ணாவிரத போராட்டம் மிகப்பெரிய நாடகம். 2021 வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து போடப்படும் என்றார் ஸ்டாலின். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
உதயநிதியும் நீட் ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் செய்யவில்லை. மானம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்.
மாணவர்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலின். நீட்டை கொண்டு வந்தது திமுக. அதை தடுக்க போராடியது அதிமுக. இதை மறைத்து போராடுகிறார்கள். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக” என்று விமர்சித்துள்ளார்.
பிரியா
மதுரை அதிமுக மாநாட்டு மேடையில் பெரியார் படம்!
மோடி வீட்டு வாசலில் போராட்டம்: எடப்பாடியை அழைக்கும் உதயநிதி