துணை முதல்வர் உதயநிதி உடை விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட்டுடன் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
அதில், “1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த திமுகவின் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணா கட்சி நிர்வாகிகள் தமிழ் கலாச்சார முறைப்படி உடை அணிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அண்ணாவை தொடர்ந்து கலைஞர் இதை பின்பற்றினார். தற்போது முதல்வர் ஸ்டாலினும் பின்பற்றி வருகிறார். ஆனால் அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ் கலாச்சார முறைப்படி உடை அணிவதில்லை.
அரசு நிகழ்ச்சிகளுக்கு ஜீன்ஸ், டி.சர்ட் அணிந்து வருகிறார்.
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாட்டு விதிகளை வகுத்து 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த அரசாணையின்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிய கூடாது.
அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்த மாநில பிரதிநிதியாக திகழும் உதயநிதி ஸ்டாலின், 2019 அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும் போது தமிழ் கலாச்சாரம் மற்றும் முறையான உடைகளை அணிய உத்தரவிட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று (அக்டோபர் 29) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? டி-ஷர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”இனி இன்னும் கடுமையாக இருக்கும்” : நன்றி கடிதத்தில் தொண்டர்களை அலர்ட் செய்த விஜய்
தீபாவளி போனஸ் : வலியுறுத்திய எடப்பாடி… நிறைவேற்றிய ஸ்டாலின்