உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்க தலைமை நீதிபதி என்.வி. ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து புதிய தலைமை நீதிபதி குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன.
யு.யு.லலித்தின் வாழ்க்கை பயணம் மற்றும் நீதித் துறையில் அவரது பங்களிப்பையும் விவரிக்கிறது இந்த கட்டுரை!
2021ம் ஆண்டு எஸ்.ஏ.போப்டே ஓய்வுக்குப்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவி ஏற்றார். வரும் 26ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு 3ஆம்தேதி கடிதம் எழுதியிருந்தார். அன்று இரவு உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நடைபெற்றது.
மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள மூத்த நீதிபதி தான், அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். தற்போதைய மூத்த நீதிபதியாக, ரமணாவுக்கு அடுத்தபடியாக 2ஆவது இடத்தில் இருப்பவர் நீதிபதி உதய் உமேஷ் லலித். அவரையே அடுத்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி தலைமை நீதிபதி என்.வி. ரமணா பரிந்துரை செய்தார்.
வழக்கறிஞர் டூ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
1957ஆம் அண்டு பிறந்தவர் நீதிபதி யு.யு.லலித். தனது படிப்பை முடித்து 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 1985 வரை பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய லலித், 1986ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜியுடன் சில ஆண்டுகள் இணைந்து பணிபுரிந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட லலித் 2014ஆம் ஆண்டு நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னதாக 1971 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் தலைமை நீதிபதியாக முதன்முதலில் நியமிக்கப்பட்டவர் எஸ்.எம். சிக்ரி. அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவில் இருந்து நேரடியாக 2ஆவது தலைமை நீதிபதியாக விரைவில் யு.யு.லலித் பதவி ஏற்க உள்ளார்.
நாட்டின் 49வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று பதவி ஏற்க உள்ள நீதிபதி யு.யு.லலித், 73 நாட்களுக்கு மட்டுமே இப்பதவியில் நீடிக்க முடியும். அவர் இந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தனது 65 வயதில் ஓய்வு பெறுகிறார்.
நீதிபதி லலித் பங்காற்றிய முக்கிய வழக்குகள்!
5ஜி ஏலத்தினை தொடர்ந்து நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் 2ஜி வழக்கில் சிறப்பு பப்ளிக் ப்ராசிக்யூட்டராக உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டவர் நீதிபதி யு.யு.லலித். இவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) செயல் தலைவராகவும் இருந்தவர்.
உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமான விசயங்களுக்காக இருக்கக்கூடிய இந்தியா லீகல் சர்வீஸ் கமிட்டியில் 2 முறை நிர்வாக உறுப்பினராக இருந்தவர். இதன்மூலமாக பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தன்னால் முடிந்த சட்ட ரீதியான உதவிகளையும் செய்துள்ளார் யு.யு.லலித்.
முத்தலாக் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த லலித், அதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பு அமர்வில் ஒரு அங்கமாக இருந்தார். முத்தலாக் என்பது இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவின் அடிப்படை உரிமையை மீறுகிறது என்றும், சட்டவிரோதமானது என்றும் கூறி முத்தலாக்கை ரத்து செய்தார்.
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக தப்பியோடிய மதுபான வியாபாரி விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி லலித் தீர்ப்பளித்தார்.
தம்பதியர் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து செய்ய இந்து திருமணச் சட்டத்தின் 13பி(2) பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 6 மாதக் காத்திருப்பு காலம் கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி லலித் இருந்தார்.
கேரளாவின் ஸ்ரீ பத்மநாமசுவாமி கோயில் சம்பந்தப்பட்ட திருவாங்கூர் சமஸ்தான குடும்ப வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளில் யுயு லலித்தும் ஒருவர்.
குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்ல முடியும் என்றால், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஏன் காலை 9 மணிக்கு தங்களது வேலையை தொடங்க கூடாது என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நீதிபதி லலித் விலகிய முக்கிய வழக்குகள்!
எனினும் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக சில முக்கிய வழக்குகளில் இருந்து நீதிபதி லலித் விலகிய சம்பவங்களும் உண்டு. குறிப்பாக அயோத்தி நில உரிமைப் பிரச்னை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி, யாகூப் மேனனின் மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மறுஆய்வு மனு, ஆசிரியர் பணி நியமன ஊழலில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மனு, சூர்யநெல்லி பாலியல் வல்லுறவு வழக்கில் மேல்முறையீடுகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரிப்பதில் இருந்து நீதிபதி லலித் விலகியுள்ளார்.
49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
இதற்கிடையே அவர் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து தனக்கான நேரத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து வழிகாட்டி உள்ளார். நீதிமன்றங்களில் இவர் வாதாடுவதை குறித்து பிரபல பத்திரிக்கையான ‘THE PRESS TRUST OF INDIA” கட்டுரை எழுதி உள்ளது. தன்னுடைய சீரிய வாதத் திறமையாலும், முக்கியமான பல வழக்குகளிலும் இவரிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டுள்ளது இந்திய அரசாங்கம். அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக கடந்த 40 வருடமாக நீதித் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் உதய் உமேஸ் லலித் எனப்படும் யு.யு. லலித் 49வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரெப்போ வட்டி 0.5% உயர்வு- வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிகரிக்கும்!