மார்ச் 23 ஆம் தேதி அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.
இதன் அடிப்படையில் ராகுல் காந்தி வகித்து வரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (எம்பி) பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தேசிய அரசியல் வட்டாரங்களிலும் சட்ட நிபுணர்கள் வட்டாரங்களிலும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
சூரத் நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?
‘2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடகாவில் பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற துணை பெயர் ஏன் இருக்கிறது?’ என்று கேட்டார்.
இது ஒட்டுமொத்தமாக மோடி என்ற துணைப் பெயர் கொண்டவர்களை எல்லாம் அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லி, குஜராத் எம்.எல்.ஏ.வும் அப்போதைய அமைச்சருமான புருனேஷ் மோடி என்பவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 500 இன் படி அவதூறு பரப்பியதற்காக “இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து” என்று பரிந்துரைக்கிறது. இந்த இரண்டு தண்டனையையும் ராகுல் காந்திக்கு வழங்கியது சூரத் நீதிமன்றம்.
மேலும் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது.

ராகுல் காந்தி உடனடியாக சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படாவிட்டாலும், இந்த தண்டனை மூலம் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோவதற்கான சட்ட வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை எதிர்கொள்கிறாரா?
சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், தனது உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவது மூன்று சூழ்நிலைகளில் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆதாயம் மற்றும் லாபம் தரும் பதவியை வைத்திருப்பது, மனநிலை சரியில்லாதது அல்லது திவாலாகி இருப்பது அல்லது செல்லுபடியாகும் குடியுரிமை இல்லாதது ஆகிய சூழல்களில் ஒரு எம்பி அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி பறிக்கப்பட ஏதுவான சூழல் உள்ளதாக சட்டப் பிரிவு 102 (1), 191 (1) ஆகியவை சொல்கின்றன.
இதைத் தாண்டில் அரசியல் அமைப்பின் பத்தாவது அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையின்றி கட்சி தாவினால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA), 1951-ன் கீழ் கிரிமினல் வழக்குகளில் குறைந்தபட்சம் இரு வருட சிறை தண்டனை பெற்றால் அவர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார்.
“அரசியலை குற்றமயமாக்குவதைத் தடுப்பது” மற்றும் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இது அமைக்கப்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான், வெறுப்புப் பேச்சு வழக்கில் தண்டிக்கப்பட்டதால், அக்டோபர் 2022 இல் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா இதை எதிர்கொண்டார்.
இந்த அடிப்படையில் ராகுல் காந்தி மீதான தண்டனையை அடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தத் தீர்ப்பை சூரத் நீதிமன்றம் 30 நாட்கள் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் ராகுல் காந்தி அப்பீல் செய்யும் பட்சத்தில் இந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால், அல்லது தண்டனை ரத்து செய்யப்பட்டால் ராகுல் காந்தியின் எம்பி பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
2018 ஆம் ஆண்டு ‘லோக் பிரஹாரி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம், “மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செயல்படாது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து “மூன்று மாதங்கள் கடந்துவிட்ட பிறகு” தகுதியிழப்பு நடைமுறைக்கு வரும் என்று பிரிவு 8(4) கூறுகிறது. அந்த கால அவகாசத்துக்குள் சட்டமியற்றுபவர்கள் உயர்நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அந்த சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இந்த நிலையில், “பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நாடாளுமன்றத்தில் இருந்து தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என்று பிரபல வழக்கறிஞரும் பாஜக எம்பியுமான மகேஷ் ஜெத்மலானி NDTV-யிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“சட்டத்தின் செயல்பாட்டின் மூலம், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார், ஆனால் முடிவு சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட வேண்டும் இன்றைய நிலவரப்படி, அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்” என்று அவர் கூறியுள்ளார்.
லில்லி தாமஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், “குற்றம் செய்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. யாராக இருந்தாலும் உடனடியாக அவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதானி விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்காக, அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பாஜகவினர் கோரி வருகிறார்கள். மேலும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் பேசிய கருத்துக்கள் தேச விரோதமானது என்றும் சொல்லி ராகுலின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் சூரத் தீர்ப்பு வெளிவந்து ராகுல் காந்தியின் எம்பி. பதவி தப்புமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சூரத் நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ராகுல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ராகுல் காந்தியின் எம்பி பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
இந்த சூழலில்தான் இன்று (மார்ச் 24) நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார் ராகுல் காந்தி.
–ஆரா
டி.எம்.எஸ் சாலையைத் திறந்து வைத்தார் முதல்வர்
அஜித்குமார் தந்தை மறைவு: ஸ்டாலின் இரங்கல்!