வைஃபை ஆன் செய்ததும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவது குறித்த தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிறைவு விழாவிலே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது அல்லது அதற்குள்ளாகவோ திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை பாஜகவில் இணைப்பது என்ற ஒரு திட்டம் அண்ணாமலை வசம் இருக்கிறது.
இதற்கான உத்தியை வகுத்துக் கொடுத்திருப்பது பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷின் மேற்பார்வையில் இயங்கி வரும், ’வாரா’ என்ற ஸ்டேட்டர்ஜிகல் நிறுவனம். லங்கேஷ் என்பவரின் பொறுப்பில் இயங்கி வரும் இந்நிறுவனம் சார்பில் இரு செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதாவது அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டுவருவது. இன்னொன்று தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து சிலரையாவது பாஜக பக்கம் கொண்டுவருவது. இந்த இரண்டு டாஸ்க்குகளை வைத்துக் கொண்டு தீவிரமாக முயற்சித்து வருகிறது பாஜக.
இதில் முதல் டாஸ்க் சந்தோஷின் நேரடி மேற்பார்வையில் முடுக்கிவிடப்பட்டது.
கடந்த பத்து நாட்களாக சட்டமன்றத்தில் கலந்துகொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில்தான் இருக்கிறார். தினமும் எடப்பாடியோடு பேசும் நண்பர்கள் யார், உறவினர்கள் யார், அதிகாரிகள் யார் என்ற பெரிய பட்டியலை எடுத்து அவர்கள் மூலமாக… ‘மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்திவிடலாம். இப்போதும் கெட்டுப் போகவில்லை’ என்று எடப்பாடியிடம் பேசிப் பார்த்திருக்கிறார்கள் பாஜக தரப்பில். ஆனால் எடப்பாடியோ, அவர்களிடமெல்லாம் அதற்கு இனி வாய்ப்பே இல்லை என்று மறுத்துள்ளார்.
இரண்டாவது டாஸ்க் தான் திமுகவில் இருந்து சிலரை பாஜகவுக்குக் கொண்டு வருவது.
இந்திய அளவில் பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ், திமுக ஆகிய கட்சியினர் பாஜகவில் இணைந்தால் அதை இந்தியா முழுதும் பேசு பொருளாக்கலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம்.
பிப்ரவரி 20ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘மக்களால் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எங்களை நோக்கி வருவார்கள் அப்போது அவர்கள் யார் என்று தெரிந்து கொள்வீர்கள்’ என்று பொடி வைத்து பேசினார்.
மக்களால் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் என்றால் தற்போதைய ஆளுங்கட்சி அல்லது ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியாக இருப்பவர்களை தான் அண்ணாமலை சொல்கிறார் என்று அப்போதே பேச்சு எழுந்தது.
ஏற்கனவே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவுக்கு செல்லப் போகிறார் என்று ஒரு வாரமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன, அதை இப்போது வரை வெளிப்படையான அறிக்கை மூலம் விஜயதாரணி மறுக்கவே இல்லை. அது மட்டுமல்ல சட்டமன்ற கூட்டம் நடந்து வரும் நிலையில் சட்டமன்றத்துக்கும் அவர் வரவில்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப் பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்ற நிகழ்ச்சிக்கும் வராமல் டெல்லியில் இருக்கிறார் விஜயதரணி எனவே அவர் கிட்டத்தட்ட பாஜகவுக்கு செல்வது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.
ஆனால் திமுகவிலிருந்து பாஜகவை நோக்கி செல்வதற்கு யார் இருக்கிறார்கள் என்ற பேச்சு அண்ணாமலையின் பேட்டியை அடுத்து திமுகவினருக்குள்ளேயே விவாதம் ஆகி வருகிறது.
திமுக ஆட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விரக்தியில் இருப்பதாகவும் சட்டமன்ற தேர்தலுக்கு வாங்கிய கடனை கூட இன்னும் அடைக்க முடிக்கவில்லை என்றும் புலம்பல் தொடர்ந்து ஒலித்து வந்தது. இப்படியாக அதிருப்தியில் இருக்கும் சில திமுக எம்.எல்.ஏ.க்களை தூக்கிவிடலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம்.
பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்த பிறகு தன்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட நண்பர்களிடம், ‘கொங்குலேர்ந்து முக்கியமானவங்க வர்றாங்கண்ணா’ என்று அடுத்த கட்ட க்ளுவையும் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. கொங்கு என்றால் அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்திலிருந்து என்று அதற்கு பொழிப்புரையும் கொடுத்தார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்.
அதேபோல கொலை வழக்கில் சிக்கியிருக்கும் கடலூர் எம்.பி. ரமேஷிடமும் பாஜகவினர் தங்கள் பக்கம் வருமாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வந்தது.
இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ’திமுகவில் சில நிர்வாகிகள் கட்சிக்குள் அதிருப்தியில் இருந்தது உண்மைதான். ஆனால் கடந்த சில மாதங்களாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிருப்தியில் இருக்கக்கூடிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் அழைத்து பேசினார். அவர்களின் தேவைகள் என்னவென்று அறிந்து அதை உடனே நிவர்த்தி செய்து வருகிறார். எனவே ஆறு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைமை இப்போது இல்லை.
மேலும் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில் இந்த கட்சியை விட்டு வெளியே செல்வது என்ற முடிவை, தமிழ்நாட்டில் பாஜகவை நம்பி யாரும் எடுக்க மாட்டார்கள். ஏற்கனவே திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி. துரைசாமியின் நிலைமை இப்போது அங்கே என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அதனால் அண்ணாமலையின் எந்த முயற்சியும் பலிக்காது என்கிறார்கள். மோடி வருவதற்குள் ஏதாவது ஒரு வைப்ரேஷன் காட்ட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. ஆனால் அது இப்போது வரைக்கும் கை கூடவில்லை என்பதுதான் நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலையின் கதவு, ஜன்னல் அண்ட்…. ; அப்டேட் குமாரு
IPL: ஆரம்பம் முதல் இன்று வரை… தோனி வாங்கிய சம்பளம் எவ்வளவு?