இரண்டு சிலை திறப்புகளும், இந்திய அரசியல் வரலாறும்

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை Two statue unveiling and Indian political history

சிலைகள் என்பவை அடிப்படையில் தனி நபர்களின் உருவங்கள்தான். ஆனால், அந்த நபர்கள் சிலைகளாக நிறுவப்படக் காரணமாக இருப்பது வரலாறு. அவர்களை உருவாக்கிய வரலாறு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கிய வரலாறும்தான். அந்த வகையில் 2023 நவம்பர் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் திறக்கப்படும் அம்பேத்கர் சிலையும்,  நவம்பர் 27, திங்களன்று சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் திறக்கப்படும் வி.பி.சிங் சிலையும் சமூக நீதி வரலாற்றின் இரண்டு பெரு வடிவங்கள் என்று சொன்னால் மிகையாகாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் இரு திருவுருவங்களாக அவர்கள் விளங்குகின்றனர். மக்களாட்சியின் உயிர்மூச்சு சமூக நீதி, சமத்துவம். அதற்கு வகை செய்தவர்களாக, குரல் கொடுத்தவர்களான இருவரும் மக்களாட்சி கருவறையின் துவாரபாலகர்கள் போன்றவர்கள் எனலாம். Two statue unveiling and Indian political history
 
அரசியலமைப்பு சட்டம் சாதித்தது என்ன?

இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு சட்டம் அதை வரைவதற்காக உருவான அவையில் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்ட நாள். ஆண்டு 1949. அதன் அடிப்படையில் இந்தியா குடியரசாக 1950 ஜனவரி 26ஆம் தேதி மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ சிற்றரசர்களும், பேரரசர்களும் ஆண்டு வந்த நாடு, முதன்முதலாக மக்களே தங்களை ஆண்டுகொள்ளும் புரட்சிகர நடைமுறையை மேற்கொண்டது. எழுதுவதற்குச் சில வரிகள்தான் என்றாலும், அது மகத்தானதொரு யுகப்புரட்சி என்றால் மிகையாகாது.

ஆனால், புரட்சி அத்துடன் நின்றிருந்தால்கூட அதன் முக்கியத்துவம் அதிகமிருந்திருக்காது. ஆண்டாண்டுக் காலமாய் நிலைத்திருந்த வர்ண பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, மனிதர்களை ஐந்து பிரிவுகளாக பிரித்து நிறுத்திய பார்ப்பனீய சமூக அமைப்பும் திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம், “எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள்” என்று பாரதி கூறிய புதிய சமூக அமைப்பும் நாட்டின் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டது. அதன் ஒட்டுமொத்த உருவகமாகத் திகழ்ந்தார் தாழ்த்தப்பட்ட மஹர் இனத்தில் பிறந்த, மாபெரும் சட்ட மேதையும், அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவுக்குத் தலைமையேற்று, அல்லும் பகலும் அயராது உழைத்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்த பாபா சாஹேப் அண்ணல் அம்பேத்கர்.
 
சட்டம் மட்டுமே நாட்டில் நீதியைப் பெற்றுத் தராது, அந்தச் சட்டங்கள் சரிவர நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவசியம் என்பதை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார் அம்பேத்கர். அப்படி அந்த அரசியலமைப்பு சட்டத்தை காத்து நிற்கும் மன்றம்தான் உச்ச நீதிமன்றம். மக்களாட்சியின் மூன்று தூண்களான நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதித்துறை ஆகியவற்றில் மற்ற இரண்டும் தவறிழைத்தால் அதனை நேர் செய்ய வேண்டிய பொறுப்பில் இருப்பது உச்ச நீதிமன்றம் ஆகும். ஆனால், அந்த நீதி மன்றத்தில், அது காத்து நிற்கும் அரசியலமைப்பு சட்டத்தை வரைந்த அம்பேத்கரின் சிலை நிறுவப்படுவதற்கு எழுபதாண்டுகளுக்கும் மேலாகி உள்ளது என்பது சிந்திக்க தக்க நிலையாகும்.
   
அதற்குக் காரணங்கள் பல. இந்து தனிநபர் சட்டத்தினை சீரமைக்க புதிய இந்து சட்ட விதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து விலகியதும், பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின் அவர் இயற்கை எய்தியதும் அரசியல் சட்டத்தை வடிவமைப்பதில் அவர் ஆற்றிய பங்கினை குறித்த பொதுமன்ற நினைவுகளை தாற்காலிகமாக மங்கச் செய்தது.

ஆனால், ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல அம்பேத்கரின் பணியின் சிறப்பு மீண்டும் பொதுமன்றத்தின் கவனத்துக்கு வந்து பெரிதும் துலங்கத் தொடங்கியது. அதற்கு தொண்ணூறுகளின் தலித் அரசியல் எழுச்சியும் ஒரு காரணியாக அமைந்தது.

உச்ச நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விசிக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமாரும், தலைவர் தொல்.திருமாவளவனும் முன்வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவில் காலதாமதமானாலும் மிகுந்த பொருத்தப்பாடுடைய செயலாக இந்த சிலை அமைகிறது.


 
அரசியல் சட்டமும், ஆளுநர் ரவியும் Two statue unveiling and Indian political history
 
அதிகாரத்தை ஒரே புள்ளியில் குவிக்க விரும்பும் சக்திகளுக்கு இன்று அரசியலமைப்பு சட்டம் இடையூறாக இருக்கிறது. பல நேரங்களில் பலரும் அரசியலமைப்பு சட்டத்தின் போதாமைகளை சுட்டிக்காட்டினாலும் யார் எதற்காக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதை ஆராய வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டம் வெறும் நீதித்துறை ஆவணம் அல்ல, அது சமூக ரீதியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஓர் ஆளுநர் இவ்விதம் கூறுவது வியப்பிற்குரியது. ஏனெனில் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசியல்வாதியல்ல. அவர் பதவியே அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு நியமனப் பதவிதான். எந்த சட்டத்தின் ஆட்சியின் குறியீடாக விளங்குகிறாரோ அந்த சட்டத்தின் ஆட்சியையே அவர் விமர்சிப்பது விநோதமானது.
 
அதற்கான காரணம் உச்ச நீதிமன்றம் அவரைப் போன்ற பாஜக நியமித்த ஆளுநர்களின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்திருப்பதுதான். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின், மாநில அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதுதான் ஆளுநர் ரவியை தூண்டியிருக்கும் எனலாம். அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் வெறும் நீதித்துறை ஆவணம் அல்ல என்ற விநோதமான கருத்தை அவர் கூறியுள்ளார்.
 
இது போன்ற நிலையில் அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை உச்ச நீதிமன்றம் பாதுகாத்து நிற்க வேண்டும் என்பதன் குறியீடாகத்தான் அம்பேத்கர் சிலை அங்கே நிறுவப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டும். காலம் கடந்து நிகழ்ந்தாலும், உச்ச நீதிமன்றத்துக்கு அணிசேர்க்கும், அர்த்தம் வழங்கும் செயலாக சிலை திறப்பு நிகழ்ந்துள்ளதை வரவேற்று மகிழ்வோம்.



சென்னையில் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் சிலை
 
உத்திரப்பிரதேச அரசியல்வாதியும், இந்தியாவின் ஏழாவது பிரதமராக ஓராண்டுக்கும் குறைவாக இருந்தவருமான வி.பி.சிங் அவர்களின் சிலை அவரது நினைவு தினத்தில் சென்னையில் திறக்கப்படுவது சிறப்பு மிக்க நிகழ்வாகும். அதில் கலந்துகொள்ள உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட சமூக நலன்கள் ஒன்றிணைவதையே இந்த நிகழ்ச்சி குறிக்கிறது. ஏன் வி.பி.சிங்குக்கு சிலை என்ற பின்னணியை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
 
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மாநில அளவில் நடைமுறையில் இருந்தாலும் ஒன்றிய அரசுப் பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள், ஒன்றிய அரசின் கீழ் இயங்கிய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 1950 முதல் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக தொடர்ந்து எழுந்துவந்த கோரிக்கைகளுக்கு செவி மடுத்து 1979ஆம் ஆண்டு ஜனதா கட்சி அரசு பி.பி.மண்டல் என்பார் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது.  பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற முழுப்பெயர் கொண்ட பி.பி.மண்டல் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் லோஹியாவின் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியிலும், ஜனதா கட்சியிலும் உறுப்பினராக இருந்த மண்டல் ஒரு மாத காலம் 1967ஆம் ஆண்டு பிஹார் மாநில முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.

மண்டலின் தலைமையில் அமைந்த கமிஷன் 1980ஆம் ஆண்டு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. எந்தெந்த சமூகங்களை பிற்படுத்தப்பட்ட சமூகமாக அங்கீகரிப்பது, அதற்கான அடிப்படைகள் என்ன என்பனவற்றை தொகுத்துக்கொண்ட கமிஷன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்ற முடிவைப் பரிந்துரைத்தது.

இந்திரா காந்தி தலைமையிலான அரசு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாலும் இதன் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்த வி.பி.சிங், ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் பதவி விலகினார். ஜன் மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கியவர், 1989ஆம் ஆண்டு தேர்தலில் பிற லோஹியாவாத கட்சிகளுடன் இணைந்து ஜனதா தள் என்ற கட்சியை உருவாக்கினார்.
 
ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பெரும்பான்மையை இழக்க, ஜனதா தளம் சி.பி.ஐ (எம்) மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. முழு பெரும்பான்மை இல்லாத நிலையிலும் வி.பி.சிங் துணிகரமாக மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தினார். முதன்முறையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகள், கல்வி நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு கிடைத்தது. முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் கொந்தளித்து எழுந்தார்கள். ஆனால், வி.பி.சிங் உறுதியுடன் நின்றார்.

இந்த நிலையில் பாஜக ராமர் ஜென்ம பூமி பிரச்சினையை கையிலெடுத்தது. அதன் தலைவர் எல்.கே.அத்வானி பாபர் மசூதி இருந்த இடத்தை ராம ஜென்ம பூமியாக அங்கீகரிக்கக் கோரி சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொண்டார். அவர் பிஹாருக்குள் நுழைந்தபோது ஜனதா தள முதல்வர் லாலு யாதவ் அவரை கைது செய்தார். வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது.
 
மண்டல் Vs கமண்டல்: புதிய அரசியல் முரண்

மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கப்படுவதை எதிர்த்து முன்னேறிய வகுப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும்பான்மையை எதிர்த்து வெல்வது கடினம் என பாஜக புரிந்துகொண்டது. அதை சமாளிக்க இந்து என்ற பொது அடையாளத்தை முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டமைக்க அது ராம ஜென்ம பூமி பிரச்சினையை கையிலெடுத்தது.

கமண்டலம் என்பது ரிஷிகளும், துறவிகளும் கையில் ஏந்தும் நீர் நிரம்பிய பாத்திரம். அந்த நீர் புனிதமானது என்று கருதப்படுவது உண்டு. எனவேதான் இந்து மத அடையாள அரசியலை கமண்டல் அரசியல் என்று கூறுகிறார்கள். மண்டல் கமிஷன் வெளிப்படுத்தும் முற்போக்கு அரசியலுக்கு எதிரானது கமண்டல் அரசியல் எனலாம்.
 
பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்கு எதிராக முன்னேறிய வகுப்பினர் திரண்டு கிளர்ச்சி நடத்தியது உண்மை அரசியல். அதற்கு மாற்றாக பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதென்பது இந்துக்களின் நலன் சார்ந்த அரசியல் என்பது கற்பிதமாகும். அந்தக் கோயில் இல்லாமலேயேதான் பல நூற்றாண்டுகளாக இந்துக்கள் ராமரை வழிபட்டு வந்துள்ளனர்.ராமாயணம் படிக்கப்பட்டு வருகிறது. ராமருக்கு பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் கோயில் கட்ட வேண்டும் என்பதில்லை. அவ்வாறு செய்வதில் பக்தியைவிட அரசியலே மிகுந்துள்ளது.
பாஜக 1990-இல் தொடங்கிய பிரச்சினையை மசூதியை இடித்து இப்போது அந்த இடத்தை கையகப்படுத்தி அங்கே ராமருக்கு ஒரு கோயிலையும் கட்டி முடித்து விட்டது. அதை விரைவில் திறந்து வைக்கப் போகிறது.

மற்றொருபுறம் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை துணிந்து அமலாக்கம் செய்த வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியில் சிலை திறக்கப்படுகிறது. அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். அரசியல் நோக்கர்கள் பலரும் மண்டல் Vs கமண்டல் அரசியல் தொடர்கிறது என்று குறிப்பிடுவது இந்த நிகழ்வில் வெளிப்படத்தான் செய்கிறது. பிற்போக்கு கமண்டல் அரசியலை, முற்போக்கு மண்டல் அரசியல் வெல்லும் என்பதே வரலாறு கூறும் செய்தி.

  கட்டுரையாளர் குறிப்பு:

Two statue unveiling and Indian political history by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சுக்கு சூப்

”மம்மூட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ”: சமந்தா

குஜராத்தா? மும்பையா? ஹர்திக் பாண்டியா நிலைமை இப்படி ஆகிடுச்சே!

போண்டாவும்… பாண்டியாவும்…. : அப்டேட் குமாரு!

Two statue unveiling and Indian political history

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *