டிஜிட்டல் திண்ணை: பாஜக இல்லாமலே இரட்டை இலை- எடப்பாடி சொன்ன சீக்ரெட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  எடப்பாடி பழனிசாமியின் சேலம்  காட்சிகள் இன்ஸ்டாவில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடியும், பன்னீரும் தனித்தனியாக அறிவித்திருப்பதால் இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி 23 ஆம் தேதி சென்னை எழும்பூரில் மாசெக்கள் கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், ‘இரட்டை இலை நமக்கே கிடைக்கும்.  நாம் போட்டியிடுவது உறுதி. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மட்டும்தான் இருக்கிறார். அது நான் தான்’ என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில்  அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையை மையமாக வைத்து செயல்பட்டால் தனது நகர்வுகள் பரபரப்பாக பேசப்படுகிறது என்பதற்காக சேலத்தில் இருந்தே செயல்படத் தொடங்கியுள்ளார். சேலம் ஓமலூரில் அமைந்துள்ள  அதிமுக மாவட்ட அலுவலகத்தில்  ஜனவரி 24 ஆம் தேதி மாலை அதிமுகவின் அனைத்து மாசெக்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் எடப்பாடி.

முறைப்படி எந்த அறிவிப்போ அழைப்போ இல்லாமல் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லம் கடந்த ஒருவாரமாக பரபரப்பாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் தினம் தினம் பலருடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி,  இன்று நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்னால் தனக்கு நெருக்கமான அதிமுக மாசெக்கள், முன்னாள் அமைச்சர்களுடன் தனியாக ஒரு ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி. அதில்  ஓ.பன்னீரின் குஜராத் பயணம் முதல் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைக்கின்றன.

‘உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடந்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இரு தரப்பு எழுத்துபூர்வமான இறுதி வாதங்களை ஜனவரி 16 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு அப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி  பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கொடுத்த உத்தரவின் மீது எடப்பாடி தொடுத்த மேல் முறையீட்டில் உயர் நீதிமன்ற பெஞ்ச் செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்துதான் ஓ.பன்னீர் செல்வம் கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் சென்றார்.

A Double Leaf Without BJP

பன்னீர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள்  குரு கிருஷ்ண குமார், ரஞ்சித் குமார் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். எடப்பாடி பழனிசாமி தன் தரப்பில் மட்டுமல்லாமல் அதிமுக செயற்குழு, அவைத் தலைவர், அதிமுக அலுவலகம் என்று எதிர் மனு தாரர்களை இணைத்துக் கொண்டார்.

ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள்  சி.எஸ். வைத்தியநாதன், அரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி, அதுல் யஷ்வந்த் சிடாலே  ஆகியோரும் வழக்கறிஞர்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கௌதம் குமார் ஆகியோரும் ஆஜரானார்கள். எடப்பாடிக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த செல்வாக்கும் நிபுணத்துவமும் பெற்றவர்கள்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாதங்கள் எழுத்துபூர்வமாக ஜனவரி 16 ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில் தீர்ப்பை வெகு சீக்கிரம் பெறுவதற்காக எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.  டெல்லியில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தங்களுக்கென செல்வாக்கு செலுத்தும் குழுவினரை சந்திப்பதும் பேசுவதுமாக இருக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் சேலம் தெற்கு எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து,

‘என்னண்ணே… இரட்டை இலை கிடைக்குமாண்ணே… தேர்தலை  இவ்வளவு சீக்கிரம் அறிவிச்சுட்டாங்களே…’என கேட்டிருக்கிறார்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘எந்த கவலையும் படாதீங்க.

வேட்பு மனு  தாக்கல் ஆரம்பிக்கிறதுக்குள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிடும்னு டெல்லியிலேர்ந்து வக்கீல்கள் சொல்லியிருக்காங்க. அதுவும் நாம எடுத்து வச்ச வாதங்களால இரட்டை இலை நமக்கே கிடைக்கும்னு அடிச்சு சொல்றாங்க.

இந்தியாவுல வேற வேற மாநிலங்கள்ல இதேபோல கட்சிகள் உடைஞ்சப்ப பொதுக்குழு முடிவைதான் தேர்தல் ஆணையம் ஏத்துக்கிட்டிருக்கு. அதனால நம் கட்சியிலையும் பொதுக்குழு நம்மகிட்டதான் இருக்கு.

அதனால எந்த சந்தேகமும் வேணாம். சீக்கிரமா உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்கு வந்திடும்.  நீங்க  போய் ஈரோட்ல வேலையை பாருங்க’ என்று தெம்போடு சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

A Double Leaf Without BJP

இதற்குப் பிறகுதான் ஜனவரி 22 ஆம் தேதி  சேலம் சூரமங்கலம் தர்மா நகரில் நடந்த எம்.ஜி.ஆர். 106 ஆவது பிறந்த  தின பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், ‘ டெல்லியில் இருந்து எனக்கு கிடைத்த ரகசிய தகவல் வர்ற 28 ஆம் தேதி தீர்ப்பெல்லாம் நமக்குதான் சாதகமாக வரப் போகுது.

பாஜக தயவு இருந்தா நல்லது… இல்லேன்னா கூட நாம இரட்டை இலையை பெற முடியும். எல்லாம் உற்சாகமாக ஈரோடு  போங்க. வேலைய பாருங்க’ என்று பேசியிருக்கிறார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக பாஜகவையும், மத்திய அரசையும் ஒருபக்கம் அணுகிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே இரட்டை இலையை பெறுவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதனால்தான் பாஜக தலைவர் அண்ணாமலையும் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான் என்று சொல்லியிருக்கிறார்.  இந்த பின்னணியில்தான் சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் முடிந்து ஈரோட்டை நோக்கித் தெம்பாக செல்கிறார்கள் அதிமுகவினர்”  என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள்!

+1
1
+1
2
+1
1
+1
3
+1
1
+1
1
+1
1