அதிமுக எம்.பி.யும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான தம்பிதுரை பிரதமர் மோடியை இன்று (பிப்ரவரி 2) சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் நிலவரம் ஈரோடு தேர்தல் , அதிமுக பாஜக கூட்டணி, இரட்டை இலை சின்னம், ஓபிஎஸ் vs ஈபிஎஸ் என பரபரப்பாகவே இருக்கிறது,
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஓபி்எஸ், ஈபிஎஸ் தரப்பினர் பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரினர்.
எனினும் இதுவரை பாஜக யாருக்கு ஆதரவு என தெரிவிக்கவில்லை என்பதோடு, அக்கட்சியும் ஈரோடு கிழக்கில் களமிறங்குகிறதா என்பதை அறிவிக்காமல் இருக்கிறது.
இதில் புதிய புயலாக நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈரோடு கிழக்கில் வைத்த பேனர் மூலம் அதிமுக பாஜக கூட்டணி முறிகிறது என பேச்சுக்கள் எழுந்தன.
இந்நிலையில் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதையடுத்து நேற்று மாலை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று முதலில் வைக்கப்பட்டிருந்ததை மாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி என வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நள்ளிரவு எம்.ஜிஆர், ஜெயலலிதா அருளாசியுடன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நல்லாசி பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வெற்றி வேட்பாளர் தென்னரசு என வைத்தனர் ஈபிஎஸ் தரப்பினர்.
இந்த விவகாரத்துக்கு மத்தியில் டெல்லி சென்ற அண்ணாமலை முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இதுவொருபுறமிருக்க இரட்டை இலை சின்ன விவகாரமும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை டென்சனாக வைத்துள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பும் தேர்தலில் போட்டியிடும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும்,
தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக பொதுக்குழு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வர இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படுவது சரியல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாளை இரட்டை இலை சின்னம் கோரிய எடப்பாடியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் நாளை பதிலளிக்க உள்ளது.
இந்த சூழலில் தான் அதிமுக எம்.பி.யும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான தம்பிதுரை இன்று (பிப்ரவரி 2) பிரதமர் மோடியை சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.
பட்ஜெட் குறித்து பிரதமரிடம் பேசியதாக தம்பிதுரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பிரதமரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தில் தமிழக இடைத் தேர்தல் நிலவரம் தொடர்பாகவும், பாஜக நிலைப்பாடு தொடர்பாகவும் பிரதமரிடம் எடப்பாடி சார்பாக தம்பிதுரை பேசியிருப்பதாக டெல்லி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
பிரியா
தை வெள்ளியில் வெளியாகும் 7 படங்கள்!
கியாரா – சித்தார்த் ஜோடி திருமணம் : களைகட்டும் ஜெய்சால்மர் பேலஸ்!
விராட் கோலியின் ஸ்டோரியில் சுப்மன் கில்: குவியும் பாராட்டுகள்!