அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், கர்நாடக தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளரை அறிவித்தது. இதனால், ஜூலை 11ஆம் தேதி தீர்மானங்களை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி இருமுறை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.
அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 20) எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.

அதுபோன்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, அதிமுகவில் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இந்த முடிவு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது.
பொதுச்செயலாளராகத் தன்னை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி கர்நாடக தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் தேர்தல் ஆணையம் இக்கடிதத்தை அனுப்பியுள்ளது.
பிரியா
எடப்பாடிக்கு வெற்றி: தேர்தல் ஆணையத்தின் கடிதம் என்ன சொல்கிறது?
ஓபிஎஸ் இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்