’ஆம்பள…’ எடப்பாடியை காய்ச்சி எடுத்த கனிமொழி எம்.பி

Published On:

| By christopher

ஆம்பளையா என்று கேட்கும் எடப்பாடி, சசிகலாவின் காலை தேடி எப்படி மண்புழு போல ஊர்ந்து போனார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக, நாதக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக முதல்வர் ஸ்டாலின் குறித்து காட்டமாக பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக எம்பி கனிமொழி இன்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் பேசுகையில், “முதலில் அதிமுக கட்சியில் யார் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது என்பதற்கே பெரும்பாடாகி விட்டது. அதன்பிறகு கட்சியின் சின்னம் யாருக்கு என்று இருதரப்புக்கு சண்டை நடைபெற்றது.

அந்த பிரச்சனையும் ஒருவழியாக முடிவுக்கு வந்த நேரத்தில், தற்போது இரட்டை இலை தாமரை இலையாக மாறிவிட்டது. அந்த தாமரையானது பங்குச் சந்தையில் பெரும் மோசடி செய்த அதானியை தாங்கி நிற்கிறது.

நேற்று பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, ’திமுகவினர் மக்களை கொட்டகையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். போலீஸ் அராஜகம் செய்கிறார்கள்’ என்று கூறியுள்ளார். இது எல்லாம் தேர்தலில் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் உளறும் வார்த்தைகள் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

தலைவர் ஸ்டாலினை பார்த்து ஆம்பளையா என்று எடப்பாடி கேட்டுள்ளார். கேட்பதற்கு முன்னால் எந்த மண்ணில் நின்று பேசுகிறோம் என்று யோசிக்க வேண்டாமா?

ஆண் திமிர் அழிய வேண்டும் என்று கூறிய பெரியார் மண்ணில் நின்று கொண்டு அதனை பேசியிருக்கிறீர்கள்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் யாருக்கும் பயந்ததும் இல்லை. பதவி வேண்டி யார் காலில் விழுந்ததும் இல்லை.

கவர்னரை சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றும் தைரியம் உடையவர் முதல்வர் ஸ்டாலின். நாட்டையே அச்சுறுத்தி வரும் பாஜகவை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான்.

அம்மையார் ஜெயலலிதா இங்கு இல்லை என்பதால் தற்போது முதுகெலும்பை நிமிர்த்தி கொண்டு பேசுகிறீர்கள். இருக்கும்போது எடப்பாடி எந்த அளவிற்கு குனிந்து நின்றார் என்பது எங்களுக்கு தெரியும்.

அதை தாண்டி சசிகலா உங்களுக்கு பதவி அறிவித்த போது நீங்கள் எப்படி மண்புழு போல ஊர்ந்து போனீர்கள் என்பது இங்குள்ள அனைவரும் பார்த்திருக்கிறோம்.

இதுதான் ஆண்மைக்கு அழகா? ஆம்பளைக்கு அழகா? ஆம்பளைக்கும், வேஷ்டிக்கும், மீசைக்கும், வீரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.

நீங்கள் காலில் விழுந்த அம்மையார் ஜெயலலிதாவும், சசிகலாவும் வேஷ்டியும், மீசையும் வச்சிக்கிட்டா இருந்தாங்க?

நீங்கள் கூறுவது போல் மீசை தான் வீரம் என்றால், அதற்கு 50 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் இங்கு ஆண் பெண்ணாகலாம். பெண் ஆணாகலாம். இதுவா வீரம்?

இப்படி பேசும் எடப்பாடியிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நான் நிச்சயம் நன்றி கூறுவேன்.

இப்படிப்பட்ட கீழ்த்தரமான இழிவான பேச்சுகளை பேசக்கூடியவர்கள் தான் தலைவர்கள் என்று சொல்லிகொண்டு நம்மிடம் உலா வருகிறார்கள். அவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

அத்துடன் அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் பாஜகவிற்கும் பாடம் புகட்டுவதாக இந்த தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இன்னும் எத்தனை காலம் இப்படி பேசுவீங்க? : எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய இயக்குநர்

“ஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார் கே.பி.முனுசாமி” : அதிமுகவை அதிர வைக்கும் ஆடியோ!

two leaf already changed into lotus
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment