தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பள்ளிக்கல்வி துறை இன்று (ஜனவரி 14) பதிலளித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கிறோம் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 13) தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பதிலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பதிவில், “புதிய கல்வி கொள்கையின் படி 6 முதல் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பாடத்திட்டத்தை தமிழக அரசு பின்பற்றியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அமல்படுத்துவதாக கடந்த செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்றுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல மும்மொழிக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
On behalf of @BJP4TamilNadu, we thank the TN State Government for including Artificial Intelligence as part of the curriculum for our Govt school students & for engaging Microsoft for its implementation, following the footsteps of CBSE’s decision to introduce AI for Class VI to… https://t.co/TVzTlGXd6E
— K.Annamalai (@annamalai_k) January 13, 2024
இந்தநிலையில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று, அண்ணாமலைக்கு பள்ளிக்கல்வி துறை பதிலளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு.
அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும், வெகு விரைவில் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு.
1970 ஜூலை 16ஆம் தேதி அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த தமிழ் மன்ற விழாவில் தந்தை பெரியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
அங்கு சென்ற தந்தை பெரியாரிடம் கல்லூரிக்கு என புதிய கம்ப்யூட்டரை வாங்கி இருப்பதாக அங்கு இருக்கும் பேராசிரியர்கள் தெரிவிக்க அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார் பெரியார்.
படியேறிச் செல்ல முடியாத முதுமையில் இருந்தாலும், முதல் மாடிக்கு தன்னை தூக்கிச் செல்லுமாறு வேண்டி, அங்கு சென்று அந்த கம்ப்யூட்டரைப் பார்த்தார்.
அப்போது அதற்கு கணினி என்கிற பெயர் வைக்கப்படவில்லை. ஐ.பி.எம் கம்ப்யூட்டர் 1620 மாடல் கணினி அது. எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையை மிகச் சரியாக அக்கணினி சொல்லி விடும் என்கிற செய்தியை அங்குள்ள பேராசிரியர்கள் சொல்ல, பெரியார் சில தேதிகளை சொல்லி, கிழமை சரியாக வருகிறதா என்று பார்த்தார்.
தன்னுடைய பிறந்த நாளையும் அவர் சொல்ல சரியாக சனிக்கிழமை என்று கூறியது அந்தக் கணினி. அவரிடம் இந்த கணினி பற்றி கூறியது அன்றைய பேராசிரியரும் பின்னாளில் துணைவேந்தரும் ஆன வா.செ குழந்தைசாமி அவர்கள்.
வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார்.
பள்ளிக் கல்வி துறை – நுண்ணறிவு பற்றிய செய்தி வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @Anbil_Mahesh @tnschoolsedu pic.twitter.com/PNX7F7znHJ
— TN DIPR (@TNDIPRNEWS) January 14, 2024
இதன் தொடர்ச்சியாக 1997 லேயே அன்றைய முதலமைச்சர் கலைஞர் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் இது குறித்து பெரிதும் விழிப்புணர்வு அடையாத காலகட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கலைஞர் சிந்தித்து இதற்கான திட்டங்களைத் திட்டினார்.
டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும் அன்றே வித்திட்டது அன்று கலைஞர் உருவாக்கிய தனி கொள்கைதான்.
இதையடுத்து அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கலைஞர் செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி. E-governance எனப்படும் மின் நிர்வாக முறையை முதன்முதலில் திருவாரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகவே குக்கிராமங்கள் தொடங்கி தலைநகரம் வரை படிப்படியாக ஒவ்வொரு துறையும் கணினி மயமாகி ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்தது. தகவல் சேமிப்பும் எளிதாகி இருக்கிறது.
இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020-ல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது.
எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 % ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது.
2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035ல் எட்டிவிடும்.
தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது.
குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை . நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.
முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது.
பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்கு பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பு இல்லை. இருமொழிக் கொள்கையே தொடரும்” என தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விடைபெற்றது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்!
பொங்கல் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!