சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவை பேச அனுமதிக்காத திமுக, நாடாளுமன்றத்தில் மட்டும் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் என சொல்வது என்ன நியாயம்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேமுதிக ஆதரவு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூன் 27) எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து ஆதரவை தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை வேண்டும்!
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மக்கள் பிரச்சனையை பற்றி பேச தான் சட்டமன்றம். அங்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து பேச தான் அதிமுக முயன்றது. ஆனால் அவர்களை பேசவிடவில்லை. இதனை தேமுதிக சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பிருப்பதாக ஒட்டுமொத்த கள்ளக்குறிச்சி தொகுதி மக்கள் கூறுகின்றனர். திமுகவின் உதவியோடு தான் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி முன்வைத்த முதல் கோரிக்கையே ‘எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும்’ என்பது தான். அப்போது அங்கிருந்த திமுக எம்.பி.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
சட்டமன்றத்தில் அதிமுகவை பேச அனுமதிக்காத திமுக, நாடாளுமன்றத்தில் மட்டும் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும் என விரும்புவது எந்த விதத்தில் நியாயம்? நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டமன்றம் என்றால் ஒரு நீதியா?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலியான 63 பேரின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
கள்ளச்சாராயம் உயிரிழப்பில் உண்மை நிலை தெரியும் வரை அதிமுக, தேமுதிக போராட்டம் ஓயாது. இந்த விவகாரம் குறித்து நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம்” என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியாவில் அறிமுகமான “மெட்டா ஏஐ”: என்னென்ன பயன்கள் தெரியுமா?
”பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை” : அஜித் பவார் பளீர்!