திமுகவில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஐவர் குழு திமுக சார்பில் அமைக்கப்பட்டது. அக்குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், நகராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பொறுப்பாளர்களுடனான சந்திப்புகள் அறிவாலயத்தில் நடைபெற்றது.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் நேரடியாக நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டிருக்கிறார். அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்கள் குறித்த ஒரு ரிப்போர்ட்டை தயார் செய்த உதயநிதி அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்.
அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் தான் தேர்தலுக்குப் பிறகு திமுகவில் முக்கிய மாற்றங்கள் நடக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே இன்று (பிப்ரவரி 27) இரண்டு மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவதாக திமுக தலைமைக் கழகத்திலிருந்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.
• சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் த.இளைய அருணாவுக்கு பதிலாக கொடுங்கையூரைச் சேர்ந்த ஆர்.டி.சேகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
• பெரம்பலூர் மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வரும் குன்னம் இராஜேந்திரன் தான் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக வேப்பந்தட்டையைச் சேர்ந்த வீ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டிருக்கிறார். குன்னம் இராஜேந்திரன் உடல்நலக் குறைபாடு காரணமாக தனது பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பு இந்த இரண்டு மாற்றங்கள் நடைபெற்றுள்ள நிலையில் தேர்தலுக்குப் பின்னர் திமுகவில் பல மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
‘எந்த தொகுதியில் போட்டி?’ : உறுதி செய்த திருமாவளவன்
இந்த இடங்களுக்கு ‘மழை நிச்சயம்’ வானிலை மையம் அறிவிப்பு!