இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற நிலையில் மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகி இருதரப்பு வாதத்தை முன்வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 4) தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பில்,”மேகலாவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்படுகிறார்”என்று தீர்ப்பளித்துள்ளார்.
அதேவேளையில்,”செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட போலீஸ் கஸ்டடியில் இல்லை. சிகிச்சை பெறும் நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக கருத முடியாது.
எனவே கைது சட்டவிரோதம் என்ற மனு தள்ளுபடி செய்யக்கூடிய ஒன்று” என்று மற்றொரு நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் செந்தில்பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு தற்போது மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
”அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி”- அமைச்சர் தங்கம் தென்னரசு