விழுப்புரத்தில் இரண்டு நாள் கள ஆய்வு… ஸ்டாலின் அறிவிப்பு!

Published On:

| By christopher

Two-day field study in Villupuram... Stalin's announcement!

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரத்தில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மாவட்டந்தோறும் கள ஆய்வு என்று நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்ட உங்களில் ஒருவனான நான், நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு, இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி, கழக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

ஜெயங்கொண்டம் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வெளியே வந்தபோது, மழைத் தூறலுக்கிடையிலும் மக்கள் திரண்டு நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர்.

காரில் இருந்தபடி கையசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட நான், மக்கள் மழையில் நின்று வாழ்த்துவதைப் பார்த்ததும், கீழே இறங்கி நடந்து சென்று, அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டேன். கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டேன். வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், ‘ரோடு ஷோ’ என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொருத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு. தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம்.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டித் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் அவருடைய சிலையை நிறுவவேண்டும் என்று மாவட்டக் கழகங்களுக்குப் பணிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில், அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளரான அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னெடுப்பில் ஜெயங்கொண்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டிருந்தது. அதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை உங்களில் ஒருவனான நான் பெற்று மகிழ்ந்தேன்.

Image

அதனைத் தொடர்ந்து உங்களில் ஒருவனான என்னுடைய பயணம், ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் டீன் ஷூஸ் என்ற தோல் அல்லாத காலணித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவை நோக்கிச் சென்றது.
தைவான் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம், தோல் அல்லாத காலணிகளைத் தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். தெற்காசியாவில் தனது தொழிற்சாலையை நிறுவவேண்டும் என விரும்பியபோது, அதைத் தமிழ்நாட்டில், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் உள்ள ஜெயங்கொண்டத்தில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதனைச் செயல்வடிவமாக்கும் வகையில் நவம்பர் 15-ஆம் நாள் ஜெயங்கொண்டத்தில் அடிக்கல் நாட்டிடச் சென்றேன். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், “எங்கள் தொகுதிக்கு வரும் முதல் தொழிற்சாலை இதுதான்” என்று நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தார்.

தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு பெரியளவில் உயர்கல்வித் தகுதி அவசியமில்லை. பள்ளி இறுதித் தேர்வு முடித்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை இந்தத் தொழிற்சாலைகள் வழங்கி வருகின்றன. பணியாளர்களில் ஏறத்தாழ 80% பேர் பெண்கள்தான். உள்ளூரிலேயே 20 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்தக் கூடியதாக இருக்கிறது.

Image

ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்றனர். உங்களில் ஒருவனான என்னைப் பார்த்ததுமே மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்து, ஆரவாரம் செய்ததுடன், “இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்”, “திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்” என்றதுடன், 234 தொகுதிகளில் 200-க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, “நிச்சயம் 200 ஜெயிப்போம்” என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர். மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன்.

குழந்தைகளின் நலன் காக்கும் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்துவிட்டுப் புறப்படும்போது, வழியில் பலரும் தங்கள் குழந்தைகளை என்னிடம் கொடுத்துப் பெயர் வைக்கச் சொன்னார்கள். திராவிடச் செல்வன், செம்மொழி போன்ற பெயர்களைச் சூட்டினேன்.

வழியெங்கும் கிடைத்த வரவேற்பினால், அரியலூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சற்று தாமதமாகிவிட்டது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உரையாற்றினர். ‘அரியலூர் அரிமா’ என நான் பெருமிதத்துடன் குறிப்பிட்ட, அரசியலில் என்னால் வார்ப்பிக்கப்பட்ட அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளரும் ஆற்றல் மிக்க அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்ததுடன், தன்னுடைய மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் அக்கறை செலுத்தி அவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார்.

Image

அரசு விழாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உங்களில் ஒருவனான என் கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அங்குத் திரண்டிருந்த ஏறத்தாழ 20 ஆயிரம் பேருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற்றதை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் வாயிலாக உறுதி செய்துகொண்டு, அவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு சென்று சேரவேண்டிய பொறுப்பும் நம்முடையது என்பதைத் தெரிவித்து, பெரம்பலூருக்குப் புறப்பட்டேன். நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட அனைவரும் நலமுடன் வீடு சென்று சேர்ந்தார்கள் என்ற தகவலும் எனக்கு கிடைத்தது.

அரசு சார்ந்த திட்டங்கள், அரசு சார்ந்த பணிகள் குறித்த ஆய்வுகளை நிறைவு செய்தபிறகு, இந்த அரசு உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைவதற்குக் காரணமான கண்மணிகளாம் உடன்பிறப்புகளுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.

தீரர் கோட்டமான திருச்சி நம் கழகத்தின் கோட்டை என்றால் அதன் தலைவாசல்களாக அரியலூரும் பெரம்பலூரும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, கழகப்பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவேண்டும் என வலியுறுத்தினேன். மினிட்ஸ் புத்தகங்களை வாங்கிப் பார்த்து, இரு மாவட்டங்களின் ஒன்றிய – நகர – பேரூர்க் கழகங்களின் செயல்பாடுகளை அறிந்துகொண்டேன்.

எப்போதும் என்னை அன்புடன் வரவேற்று மகிழ்பவரும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் மாமாவுமான மூத்த ஒன்றியச் செயலாளர் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் ஒன்றியத்தில் அதிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதைக் கழகத்தினரிடம் எடுத்துக்கூறினேன்.

Image

அரியலூர் மாவட்டத்தில், ஆண்டிமடம் வடக்கு ஒன்றியம் அதிகமாக 24 நிகழ்ச்சிகளையும், அரியலூர் நகரக் கழகம் 21 நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் அதிகமாக 16 நிகழ்ச்சிகளும், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் 11 நிகழ்ச்சிகளும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் 9 நிகழ்ச்சிகளும் நடத்தி மக்களிடம் கழகத்தை வலிமையாக வைத்திருப்பதை அறிந்து பாராட்டினேன்.

கழகத்தில் உள்ள அனைவரும் சுணக்கமின்றிச் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். படம் எடுக்கும்போது கழக நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணிகளையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன்.

நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன்” இவ்வாறு ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல்!

தன்னுடன் இருந்த குழந்தை யார்? – மனம் திறந்த கஸ்தூரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share