தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவியை சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 30) மனு அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அண்ணணாகவும், அரணாகவும் பெண்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயமாக உடன் நிற்பேன்” என்று விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க விஜய் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தார். மதியம் 1 மணிக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 10 பேருடன் ஆளுநரை சந்திக்க விஜய்க்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, மதியம் 12.40 மணியளவில் ஆளுநரை சந்திப்பதற்காக TN 14 AK 6791 SWIFT காரில் ஆளுநர் மாளிகைக்கு விஜய் வந்தார். கடந்த ஜூலை மாதம் விஜய் தனது சொந்த பயன்பாட்டிற்காக இந்த காரை வாங்கியிருப்பதாக தவெக நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

பின்னர் ஆளுநரை 15 நிமிடம் விஜய் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு மதியம் 1.10 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து விஜய் வெளியே வந்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஆளுநர், விஜய் சந்திப்பின் போது, முதலில் இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்தார் விஜய்.
இதை கவனமாக படித்துப்பார்த்த ஆளுநர் கண்டிப்பாக பரிசீலிக்கிறேன் என்று உறுதியளித்தார். பின்னர் விஜய் கிளம்பும்போது புதிதாக கட்சி ஆரம்பித்ததற்கு ஆளுநர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆளுநருக்கு நன்றி தெரிவித்துவிட்டு விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 : ஸ்டாலினுக்கு ராமதாஸ், முத்தரசன் வலியுறுத்தல்!
ஏய் தோசா… கேலி செய்த போட்டோகிராபர்கள்: நச்சுனு பதிலடி கொடுத்த கீர்த்தி