ஜூன் 3… ஸ்டாலினுக்கு வேல்முருகன் கெடு!

அரசியல்

திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான தனது விமர்சனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளிப்படையாக பேசி வருகிறார். அந்தவகையில் நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாட்டின் சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக இன்று (மே 29) ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “ஜூன் 3 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் 37 ஆயுள் தண்டனை கைதிகள், வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் இருக்கும் ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும். ஆட்சிக்கு வந்தால் இவர்களையெல்லாம் விடுதலை செய்வோம் என்று திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். திமுக ஆட்சி அமைவதற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தவர்கள் இஸ்லாமிய மக்கள். பேரறிவாளன் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டது போல் ஜனநாயக அடிப்படையில் இஸ்லாமிய சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஒரு வேளை இதற்கு நிரந்தர தீர்வு வழங்கவில்லை என்றால் கோட்டையை நோக்கி பேரணி செல்வதற்கு தயாராக உள்ளோம்.

திமுக மட்டுமின்றி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் போராடித்தான் பல்வேறு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி இருக்கிறது. இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவான ஜுன் 3-ஆம் தேதி விடுதலை கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஐபிஎல் இறுதிப்போட்டி: பிரார்த்தனை செய்யும் விக்னேஷ் சிவன்

ஆளுநர் மீது வழக்குப்போட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் 

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *