டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கூட்டணிக் கட்சித் தலைவர்… ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி!                 

Published On:

| By Aara

tvk velmurugan mla resigns

வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் கூட்டணிக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனின் அக்கினி பேட்டி வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன்… அவ்வப்போது திமுக கூட்டணிக்குள் உரிமைக் குரல்களை எழுப்பி வருபவர்தான். சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி,  அரசுக்கு நெருடலான கருத்துகளை தைரியமாக எடுத்துரைப்பவர் வேல்முருகன்.

tvk velmurugan mla resigns

நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட, ‘எனது பண்ருட்டி தொகுதி ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது தொகுதியில் நீர்வளத்துறையில் இருந்து ஒரு சிறு நற்பணி கூட நடைபெறவில்லை’ என்று வேல்முருகன் பேச, குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ‘மூத்த உறுப்பினர் நீங்க பொத்தாம் பொதுவா பேசக் கூடாது. நீங்க சொன்னதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்’ என்றார். அப்போது வேல்முருகன், ‘செய்யலைன்னா செய்யலைனுதானே சொல்ல முடியும் பேரவைத் தலைவரே…’ என்று மீண்டும் எதிர்க்கேள்வி கேட்டார்.

இப்படிப்பட்ட இயல்புகொண்ட வேல்முருகன் கடந்த ஓரிரு நாட்கள் கடலூரில் நேற்று (டிசம்பர் 15) செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து, ‘திமுக அரசின் அமைச்சர்கள் என்னை மதிப்பதே இல்லை. என் தொகுதிக்கு வெள்ள சேதத்தை பார்வையிடுவது கூட எனக்கு முறைப்படி தெரியப்படுத்தவில்லை. இதற்கெல்லாம் 2026 இல் பதில் சொல்ல வேண்டும்’ என்று பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின் தனக்கு நெருக்கமான சென்னை பத்திரிகையாளர்களிடம் பேசிய வேல்முருகன் மேலும் சில அதிர்ச்சிக்குரிய விஷயங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

’கூட்டணி பேசும்போது  துணை சபாநாயகர் அல்லது  வன்னியர்  வாரிய தலைவர் இரண்டில் ஒன்றை தருவதாக சொன்னார்கள். ஆனால், இரண்டும் எனக்குத் தரவில்லை.

நான் பாமகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து திமுகவை ஆதரித்து வருகிறேன். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து  வன்னியர் சங்கப் புள்ளிகளோடு முதல்வரை சந்திக்க நான் பல முறை அப்பாயின்ட்மென்ட் கேட்டும் எனக்கு முதல்வரை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை.

ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோரை வரவழைத்து நேரம் கொடுத்துப் பேசுகிறார் முதல்வர்.

tvk velmurugan mla resigns

இப்படியென்றால் வன்னியர் சமூக புள்ளிகள் எனது நிலை பற்றி என்ன நினைப்பார்கள்?

இதுமட்டுமல்ல…எனது எம்.எல்.ஏ. சட்டமன்ற மேம்பாட்டு நிதியை இன்னின்ன வேலைகளுக்கு பயன்படுத்த எனக்கு உரிமை இல்லை. அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர்தான்  என்னுடைய தொகுதி மேம்பாட்டு பணிகளில் என்னென்ன பணி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

மத்திய அரசில் இருந்து நான் போராடி நிதி வாங்கி வந்தாலும், அந்த திட்டப் பணிகளை அவர்களுக்கு  வேண்டியவர்களுக்கே கொடுக்கிறார்கள். அதுபற்றி என்னிடம் ஆலோசிப்பது கூட இல்லை.

tvk velmurugan mla resigns

பெஞ்சல் புயல் சேதத்தைப் பார்வையிட அமைச்சர்கள்,  துணை முதல்வர் பண்ருட்டி வந்தபோது, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் கூட எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு மேல் இந்த எம்.எல்.ஏ. பதவியில் இருக்க வேண்டுமா?’ என்று ஆவேசமாகக் கேட்டிருக்கிறார் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின்  செயற்குழு கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளோடு ஆலோசித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார் வேல்முருகன் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

’வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். அதனால் அவர் சட்டமன்ற பதிவுகளில் திமுக எம்.எல்.ஏ.வாகத்தான் கருதப்படுகிறார்.

இந்நிலையில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதமே தயார் செய்துவிட்டார் வேல்முருகன். செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுதும் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அளவுக்கு ஆலோசனையில் இருக்கிறார் வேல்முருகன்.

இதை அதிமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுகவின் பொருளாளர் ஆகிறார் விஜயபாஸ்கர்

அமித் ஷா பதில்-ஓரளவு நம்பிக்கை: டி.ஆர்.பாலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share