’டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்’ : சீமானுக்கு தவெக பதிலடி!

Published On:

| By christopher

tvk sambath reply to ntk seeman

பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பை பணக்கொழுப்பு என சீமான் இன்று (பிப்ரவரி 12) குறிப்பிட்ட நிலையில், அதற்கு அக்கட்சியின் பொருளாளர் சம்பத்குமார் பதிலடியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். tvk sambath reply to ntk seeman

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு நாட்களாக சந்தித்து பேசி வந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பிரசாந்த் கிஷோர் – விஜய் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எனக்கு மூளை இருக்கு, பணம் தான் இல்லை! tvk sambath reply to ntk seeman

அதற்கு சீமான் “எனக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் ஆட்சி செய்த முன்னோர்களான காமராஜர், அண்ணா, குமாரசாமி, ஓமந்தூரார் போன்றோர் வியூக வகுப்பாளர்களை வைத்து வெற்றி பெறவில்லை. என் காடு, என் மக்கள், என் நிலத்தை பற்றி சரியாக அறிந்துக் கொள்ளாமல், தொகுதிகளில் யாரை நிறுத்தவேண்டும் என்று கூட தெரியாமல் எதற்கு இந்த வேலைக்கு வர வேண்டும்? எனக்கு மூளை அதிகமாக இருக்கிறது. பணம் தான் இல்லை.

பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும்? இங்கு எத்தனை ஆறு, குளம் இருக்கிறது? இங்குள்ள சமூகங்களை பற்றி, அவர்களுக்கு இருக்கிற பிரச்சனை பற்றி அவருக்கு என்ன தெரியும்? உடல் கொழுப்பு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுமாறி தேர்தல் வியூக வகுப்பாளர்களை பயன்படுத்துவது என்பது பணக்கொழுப்பு” என்று சீமான் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர். ஆ. சம்பத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சீமானுக்கு அரசியல் யதார்த்தம் புரியவில்லை!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமானுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் “வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி” என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

உங்களோடு எங்களுக்கு ஒத்து போகாது!

அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம், நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.

ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம் செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்துப் போகாது” என்று சம்பத் குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share