பெண்களின் பாதுகாப்புக்காக ஆளுநரைச் சந்தித்து விஜய் மனு அளித்திருப்பதை வரவேற்கிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணா பல்கலையில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதை கண்டித்தும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தின.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 30) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.
அப்போது ஆளுநருக்கு விஜய் திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். பாரதியார் கவிதைகள் புத்தகத்தை ஆளுநர் ரவி, விஜய்க்கு பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் விஜய் அளித்த மனுவில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் ஆளுநரை சந்தித்ததை வரவேற்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதள பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், விஜய்யும் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்.
வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தசூழலில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆளுரை விஜய் சந்தித்த பின்னணியில் டெல்லி பாஜக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆளுநரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் டெல்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது தவெக தலைவர் நடிகர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவியை விஜய் 15 நிமிடம் சந்தித்தார்.
ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார்.ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் எலைட் அரசியல்” என்று விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஏய் தோசா… கேலி செய்த போட்டோகிராபர்கள்: நச்சுனு பதிலடி கொடுத்த கீர்த்தி