தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகளானது நடைபெற்று வருகிறது. விஜய் மாநாடு தொடர்பாக மின்னம்பலத்தில் நாம் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.
தற்போது விஜய் மாநாட்டில் மக்கள் அமரும் இடத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், 50 ஆயிரம் இருக்கைகள் போட ஏற்பாடு செய்து வருகிறார்கள். கார் பார்க்கிங்கிற்கு செல்லும் வழியில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமரும் இடத்தில் பந்தல் அமைக்கப்படவில்லை. ஸ்டேஜ் பகுதியில் மட்டும் தான் பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
மாநாட்டில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு ஃபுட் கோர்ட் அமைத்து உணவு வழங்கலாமா அல்லது அவர்கள் அமரும் சேர்களில் உணவு பொட்டலங்கள் வைக்கலாமா என்ற ஆலோசனையில் நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர்.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் அமரும் சேர்களில் உணவு வழங்குவது சிரமம் என்பதால் நான்கு அல்லது ஐந்து இடங்களில் ஃபுட்கோர்ட் அமைத்து உணவு வழங்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறார்கள்.
மாநாடு பணிகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தோம்…
“மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குழுக்களுக்கிடையே சரியான முறையில் தகவல் பரிமாற்றம் இல்லை. யார் யார் எந்தெந்த பணிகளை செய்கிறார்கள் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
மாநாட்டு பணிகளில் ஈடுபடுகிறவர்களில் பெரும்பாலானோருக்கு அரசியல் அனுபவமும் மாநாடு வேலைகளை ஒருங்கிணைக்கும் அனுபவமும் இல்லை. இதுதான் அவர்களுக்கு முதல் மாநாடு. அதனால் பணிகளில் சில தொய்வுகள் எற்பட்டு வருகிறது.
புதுச்சேரி தவெக மாநில நிர்வாகி சரவணன் நேற்று உயிரிழந்ததால், மாநாட்டு பணிகளை கவனித்து வந்த நிர்வாகிகள் புதுச்சேரிக்கு சென்று விட்டனர். புஸ்ஸி ஆனந்துக்கு மிகவும் நெருக்கமானவர் சரவணன். அதனால் அவரை பார்த்ததும் கதறி அழுதுவிட்டார்.
சரவணன் மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்திருத்திருக்கிறார். சரவணனுக்கு அஞ்சலி செலுத்த விஜய் நேரில் வருவார் என்று நிர்வாகிகள் பலரும் எதிர்பார்த்தோம். ஆனால், விஜய் வராதது கொஞ்சம் வருத்தம் தான்” என்கிறார்கள் நிர்வாகிகள்.
சென்னை மெரினாவில் ஏர் ஷோ நடந்தபோது கடும் வெயிலின் தாக்கத்தால் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் விஜய் மாநாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதில் காவல்துறை மிகவும் அலர்ட்டாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, வடக்கு மண்டல ஐஜி, விழுப்புரம் சரக ஐஜி, எஸ்.பி தலைமையில் போலீசார் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர் என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில். மேலும், மாநாட்டில் 150 சிசிடிவி கேமராக்களை பொருத்த போலீசார் தவெக நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத சென்னை” – எடப்பாடி சுளீர்!
தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு: நீதிமன்றத்தில் சாம்சங் தகவல்!