மாநாட்டுக்கு பின்னர் விஜய் நேரடியாக இன்று (நவம்பர் 3) பங்கேற்றுள்ள கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். அதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
விஜய்யின் கொள்கைகளுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, விசிக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நேற்று மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 20 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இன்று காலை பனையூரில் கட்சி செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் தவெக கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய்யும் நேரடியாக பங்கேற்றுள்ளார்.
ஏற்கெனவே விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் 19 மாவட்டச் செயலாளர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேரமின்மை காரணமாக பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று கூட்டத்தில் பங்கேற்றுள்ள அந்த 19 மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் முக்கிய அசைன்மென்ட் கொடுக்க உள்ளாராம்.
மாநாட்டைத் தொடர்ந்து சீமான், ஹெச் ராஜா உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த 19 மாவட்டச் செயலாளர்கள் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
அதற்காக அலுவலகத்திலேயே அறிக்கைகள் இன்று தயார் செய்யப்பட்டு விஜய் ஒப்புதல் பெற்று சமூகவலைதளங்களில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் 19 மாவட்டச் செயலாளர்களும் பிறக் கட்சித் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோவில் பேசி, அதனை அனைத்து சமூகவலைதளங்களிலும் வெளியிட விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து இன்று காலை வருகிறார் என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், அவர் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காரில் புறப்பட்டு கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
நீலாங்கரை இல்லத்தில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே அவர் பட்டினப்பாக்கத்திற்கு மாறி விட்டார் என்கின்றனர் கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
இணைய அச்சுறுத்தல் ‘எதிரிகள்’ பட்டியலில் இந்தியா!
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!
எம்ஜிஆரைப் பாத்து தமிழகத்துல பல நடிகருங்க கட்சி ஆரம்பிச்சாங்க, இன்னிக்கு யாரு நிலைச்சி நிக்கறாங்க, எப்படி நிலைக்கறாங்கனு பாத்து, படிக்கனும்.