வடக்கே அஞ்சலை அம்மாள்… தெற்கே வேலுநாச்சியார்: விஜய் முன்னிறுத்தும் சிங்கப் பெண்கள்!

அரசியல்

தவெக மாநாடு ஃபீவர் இப்போதே ஆரம்பித்துவிட்டது. சோஷியல் மீடியாக்களை திறந்தாலே ‘தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பொறக்குது’ என தவெக பாடல் தான் எதிரொலிக்கிறது.

விஜய் தனது மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து அவரின் ஒவ்வொரு நகர்வுகளும் அரசியல் அரங்கில் மிக உன்னிப்பாகவே கவனிக்கப்பட்டது. ஒருவழியாக, நாளை மறுநாள் அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய்யின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது.

விஜய் மாநாட்டில் கட் அவுட்டுகள்!

முதல் முதலாக விஜய் ஒரு மாநாடு நடத்துகிறார். எந்தெந்த தலைவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்யப் போகிறார் என்று மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

 

ஏற்கனவே 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  விருது வழங்கிய நிகழ்ச்சியில், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை சொல்லியிருந்தார் விஜய்.

அதே தலைவர்களை முன்னிறுத்தி தான் தற்போது விஜய் மாநாடு கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சுதந்திர போராட்ட பெண்மணிகள் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் கட் அவுட்டுகளும் மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.

முதல் மாநாட்டிலேயே விஜய் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் யார்? சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை பார்க்கலாம்…

யார் இந்த அஞ்சலை அம்மாள்?

1890-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி கடலூர் மாவட்டம் முதுநகர் சுண்ணாப்புக்கார தெருவில் அம்மாக்கண்ணு – முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்தார் அஞ்சலை அம்மாள்.

சிறுவயதிலேயே காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அஞ்சலை அம்மாள், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1908-ஆம் ஆண்டு கடலூரைச் சேர்ந்த முருகப்பாவை திருமணம் செய்து கொண்டார். அஞ்சலை அம்மாளின் விடுதலை போராட்டத்திற்கு முருகப்பா உற்ற துணையாக இருந்தார்.

1857-ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சியின் போது, இந்திய விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்ய காரணமாக இருந்த பிரிட்டிஷ் படைத்தளபதி ஜேம்ஸ் நீல் நினைவாக 1860-ல் சென்னை மவுண்ட் சாலையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலையை அகற்றக்கோரி 1927-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி சோமயாஜீலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அஞ்சலை அம்மாள், தனது ஒன்பது வயது மகள் அம்மாகண்ணுவுடன் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தின் போது தாயும் மகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதுக்கு பிறகு அஞ்சலை அம்மாளின் வீரத்தை அறிந்த காந்தியடிகள், தமிழகம் வரும்போதெல்லாம் அவரை சந்திக்க விரும்பினார்.

அப்படி 1927-ல் அஞ்சலை அம்மாள் குடும்பத்தை சந்தித்த காந்தியடிகள், அஞ்சலை அம்மாள் மகள் அம்மாகண்ணுவின் பெயரை லீலாவதி என்று மாற்றினார்.

அந்த காலக்கட்டத்தில் இந்திய அளவில் காந்தியடிகளுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிக முக்கிய பெண்மணியாக அஞ்சலை அம்மாள் இருந்தார்.

கடலூரில் 1931-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்ற அஞ்சலை அம்மாளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணி. சிறைக்குள் கடுமையான வேதனைகளை அனுபவித்தார். இருப்பினும் ஆங்கிலேயருக்கு எதிராக போராட வேண்டும் என்ற மன உறுதியை மட்டும் அவர் இழக்கவே இல்லை.

பின்னர், ஒரு மாதம் சிறை விடுப்பில் சென்ற அஞ்சலை அம்மாள், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜெயவீரன் என்று பெயர் சூட்டப்பட்டது.

மது ஒழிப்பு போராட்டம், கள்ளுக்கடை மறியல் போராட்டம், அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம் என தன் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை போராட்டங்களிலேயே கழித்தார் அஞ்சலை அம்மாள். இதனால் ‘தென்னாட்டு ஜான்சிராணி’ என்று அழைக்கப்பட்டார்.

கடலூர் தொகுதியில் இரண்டு முறை சென்னை மாகாண காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபுறம் போராட்டம், மறுபுறம் மக்கள் பணி என தன் வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்காகவே தொண்டாற்றினார் அஞ்சலை அம்மாள். 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி தனது 71-ஆவது வயதில் அஞ்சலை அம்மாள் காலமானார்.

இந்தநிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் அஞ்சலை அம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு கடலூரில் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வட மாவட்டங்களில் வீரமிக்க பெண்மணியாக திகழ்ந்த அஞ்சலை அம்மாளுக்கு தவெக மாநாட்டில் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

யார் இந்த வேலுநாச்சியார்?

விஜய் மாநாட்டில் வைக்கப்பட்ட இன்னொரு பெண் கட் அவுட் வீரமங்கை வேலுநாச்சியாருடையது.

ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி –  சக்கந்தி முத்தாத்தாளுக்கு 1730-ஆம் ஆண்டு வேலுநாச்சியார் பிறந்தார். வேலுநாச்சியார் ஒரே பெண் என்பதால், ஆண் வாரிசுபோல வளர்க்கப்பட்டார்.

சிறுவயதிலேயே வாள் வீச்சு, களரி, குதிரையேற்றம், சிலம்பம் போன்ற வீரக்கலைகள் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. அதேபோல ஆங்கிலம், பிரெஞ்ச், உருது மொழிகளில் தேர்ச்சி பெற்று வீரமிக்க மங்கையாக வலம் வந்தார்.

1746-ஆம் ஆண்டு சிவகங்கை இளைய மன்னர் முத்து வடுகநாதரை மணந்து பட்டத்து இளவரசியானார். 1772-ஆம் ஆண்டு நடைபெற்ற காளையார் கோவில் போரில் வேலுநாச்சியார் தனது கணவர் முத்து வடுகநாதர் மற்றும் மகள் கெளரி நாச்சியாரை இழந்தார்.

பிரிட்டிஷ் படைத்தளபதி பான் ஜோர் மற்றும் ஜோசப் ஸ்மித் ஆகியோர் வேலுநாச்சியாரின் கணவர் மற்றும் மகளை கொன்றனர். அதற்குப் பின்னரும் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தை கையிலெடுத்துத் தொடர்ந்தார் வேலுநாச்சியார்.

ஆனால், அது அவ்வளவு எளிதாக அவருக்கு அமையவில்லை. தொடர்ந்து எட்டு ஆண்டுகள் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வந்தார்.

ஆங்கியேலர்களை வீழ்த்துவதற்காக தளவாய் தாண்டவராயன் பிள்ளை, தனது சேனாதிபதிகள் மருது சகோதர்களுடன் இணைந்து வியூகம் அமைத்தார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறு நில மன்னர்களை ஒருங்கிணைத்தார்.

வேலு நாச்சியாரின் அறிவுரையின் பேரில் தாண்டவராய பிள்ளை ஹைதர் அலிக்கு ஒரு மடலை அனுப்பினார். அதில், ஆங்கிலேயரை எதிர்த்து போராட 5,000 குதிரை படை வீரர்களையும், 5,000 காலாட்படை வீரர்களையும் தங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உதவி கேட்டிருந்தார்.

இந்த மடலை படித்த ஹைதர் அலி, வேலு நாச்சியாரை சந்திக்க விரும்பினார். அப்போது வேலு நாச்சியாரின் உருது மொழி புலமையைக் கண்டு வியந்து ஹைதர் அலி, தாங்கள் கேட்ட படைகளை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.

தொடர்ச்சியாக வியூகம் அமைத்து படைகளை திரட்டிய வேலு நாச்சியார், 1780-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது படையை திரட்டிக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டார். குதிரைப் படை, காலாட்படை, பீரங்கிப்படையை வேலுநாச்சியார் முன்னின்று வழிநடத்தினார். அவருக்கு வலதுகரமாக மருதுசகோதரர்கள் இருந்தனர்.

இந்த படை முதலில் காளையார் கோவிலை கைப்பற்றியது. தொடர்ந்து சிவகங்கை கோட்டையை நோக்கி சென்ற படை, பிரிட்டிஷ் படையை தோற்கடித்தது. இந்த படையெடுப்பில் தனது கணவரை கொன்ற தளபதி பான் ஜோர், ஜோசப் ஸ்மித்தைக்  கொன்று அழித்தார் வேலுநாச்சியார்.

இந்த பெரும் வெற்றிக்கு பிறகு, 1780 முதல் 1789-ஆம் ஆண்டு வரை சிவகங்கை சீமையின் ராணியாக இருந்து மக்கள் போற்றும்  ஆட்சியை நடத்தினார் வேலு நாச்சியார்.

சிறுவயதில் கணவனை இழந்து ஒற்றை பெண்மணியாக போர் படைக்கு தலைமை தாங்கி இந்திய சுதந்திர போராட்டத்தில் வீரமிக்க மங்கையாக திகழ்ந்த வேலுநாச்சியார், 1796-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி காலமானார்.

வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த நினைவை போற்றும் வகையில், 2014-ஆம் ஆண்டு அவருக்கு சிவகங்கையில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

இன்றளவும் தென் மாவட்டங்களில் நடைபெறும் வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களில் வேலு நாச்சியார் நினைவு கூறப்படுகிறார். பலரும் தங்கள் பெண் குழந்தைகள் வேலு நாச்சியாரைப் போன்று வீரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாச்சியார் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

தெற்கே வேலுநாச்சியார், வடக்கே அஞ்சலை அம்மாள் என இருபெரும் வீரமிக்க பெண்களுக்கு தனது முதல் மாநாட்டிலேயே அறிமுகம் கொடுத்து அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் விஜய். சினிமாவில் மட்டும் பெண் உரிமை, சிங்கப்பெண்ணே போன்ற வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தாமல் அரசியல் வெளியிலும் அதனை பேசியுள்ளார்.

விஜய்யின் இந்த அரசியல் கணக்கு மக்களிடம் எப்படி எதிரொலிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு ரத்து!

’டில்லி வில் ரிடர்ன் சூன்’ – ‘கைதி – 2’ குறித்து லோகேஷ் கனகராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *