தவெக மாநாடு வெற்றி பெற அக்கட்சியினர் இன்று (அக்டோபர் 23) கணபதி ஹோமம் நடத்தியுள்ளனர்.
தவெக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக விக்கிரவாண்டியில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ராட்சத பலூன்கள் விஜய்யின் புகைப்படத்துடன் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த பலூன்கள் மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.
மாநாடு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் கட் அவுட்களும், நூற்றுக்கணக்கான கட்சிக் கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இருயானைகள் கம்பீரமாக பிளிறும் வகையில், ஜார்ஜ் கோட்டை சுற்றுச்சுவர் வடிவில் முகப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கட்சித் தொண்டர்கள் அமர்வதற்கும், அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கும் போதுமான வசதிகள் செய்யப்படாத நிலையை காணமுடிகிறது. இந்தசூழலில், வரும் 29ஆம் தேதி வரை மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) விக்கிரவாண்டி வி.சாலையில் உள்ள ஏரிக்கரை அய்யனார் கோயிலில் மாநாடு வெற்றி பெற வேண்டி தவெகவினர் கணபதி ஹோமம் நடத்தினர். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதாயே வர வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா” என்ற மந்திரத்தை ஓதி, மாநாட்டை வெற்றி பெறவும், மக்கள் கூடுவதற்கும், மழை வராமல் இருப்பதற்கும் ஹோமம் நடத்தியதாக அதில் கலந்துகொண்டவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.
ஹோமம் செய்யும்போது வைக்கப்பட்டிருந்த கலசத்தை கொண்டு வந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கொடுத்ததும், அவர் மாநாடு திடல் முழுவதும் அந்த தண்ணீரை தெளிக்க சொல்லியிருக்கிறார்.
“மறுபக்கம் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினாலும், அதை ஏற்காமல் இன்னும் நாட்கள் இருக்கிறது. கடைசி நாள்வரை தேவையான அனைத்து வசதிகளையும் செய்துமுடிப்போம் என்று தவெக கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
காற்று, மழை அடித்தாலும் மாநாட்டை நடத்தியே தீருவோம் என்று உறுதியாக கூறுகின்றனர்.
ஆனால், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் சென்று வரக்கூடிய பாதைகளை மட்டுமே இதுவரை சரி செய்து வருகின்றனர். கார்களை நிறுத்தக் கூடிய இடத்தில் இதுவரை எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் இருக்கின்றனர்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை ஏற்கக்கூடாது: பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு!
ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணிப்பது ஏன்?: உயர்க்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்!
Comments are closed.