சென்னையில் இருந்து விஜய் மாநாட்டுக்காக கிளம்பிய இளைஞர்கள் விபத்தில் சிக்கினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் இன்று (அக்டோபர் 27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என்ற தவெக கட்சியினர் கூறும் நிலையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இளைஞர்களும் விஜய்யின் ரசிகர்களும் வி.சாலை வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 27) காலை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கட்சிக்கொடியுடன் மாநாட்டுக்கு புறப்பட்ட இளைஞர்கள் விபத்தில் சிக்கினார்.
எம் சாண்ட் மணலுடன் வந்த லாரி ஒன்று , டிஎம்எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பியபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பாக வர வேண்டும், இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும், பெண்கள், குழந்தைகள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் மாநாட்டுக்காக கட்சி கொடியுடன் புறப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது தவெகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி சென்னையில் இருந்து விழுப்புரம் டிக்கெட் எடுத்துக்கொண்டு நிதிஷ்குமார் என்ற இளைஞர் உட்பட இருவர் ரயிலில் சென்றுள்ளனர்.
அந்த ரயில் விக்கிரவாண்டி பகுதியில் மெதுவாக சென்றதாக கூறப்படும் நிலையில் இந்த இளைஞர்கள் ரயில் இருந்து இறங்க முற்பட்டிருக்கின்றனர். அப்போது இருவரும் கீழே விழுந்ததில் நிதிஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் விஜய் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றதாக கூறப்படுகிறது.
சென்னை, நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் நல்வாய்ப்பாக வேனில் பயணித்த 11 பேரும் உயிர் தப்பினர். ஓட்டுநர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பிக் பாஸ் 8 ; வெளியேறினார் தர்ஷா – ஹவுஸ்மேட்ஸை விளாசிய சேதுபதி