”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடந்தது. மே 22ஆம் தேதி போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
விசாரணை ஆணையம்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆணையத்தின் அறிக்கை 4 பகுதிகளாக கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியாக அரசு நடவடிக்கை எடுத்துவருவதுடன், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் மேலும் ரூ. 5 லட்சம் ரூபாயை வழங்கியது.
ராமதாஸ் வலியுறுத்தல்
இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (நவம்பர் 30) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரத்தை கொலைக் குற்றமாகவும், கூட்டுச் சதியாகவும் பார்க்க வேண்டும். அதற்கான தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இதை சாதாரண விதிமீறலாக மட்டும் கருதி துறை சார்ந்த நடவடிக்கையை மட்டும் அரசு மேற்கொள்வதை ஏற்க முடியாது.
தப்பிப்பதை அனுமதிக்கக்கூடாது
சாத்தான்குளம் காவல் நிலைய மரணத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், அதைவிட கொடுமையான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது.
எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
எதிரிகளின் வதந்திகளை அறுத்து எறிய வேண்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
குஜராத் முதற்கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!