அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இருவரும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். Tusshar Mehta and Kapil Sibal fire arguments
திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. இதுகுறித்து அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. அங்கித் திவாரி தொடர்பான வழக்கைத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது அமலாக்கத் துறை. உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டதால், உச்ச நீதிமன்றம் சென்றது அமலாக்கத் துறை.
‘இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை தர மறுப்பதாகவும், இதுதொடர்பான தகவல்களை இணையத்தில் பதிவேற்றாமல் வைத்திருக்கிறார்கள்’ என்றும் அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த மனு இன்று (ஜனவரி 25) நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கேவி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினார்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “மாநில அரசின் விசாரணைக்கு சவால் விடுவது என்பது இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்பில் மாநில சுயாட்சியை மோசமாக பாதிக்கும். எனக்கு சில ஆட்சேபணைகள் உள்ளன. அவை அரசியல் தொடர்பானவை அல்ல, கூட்டாட்சி தொடர்பானவை” என்று தெரிவித்தார்.
இதற்கு துஷார் மேத்தா, “அவருடைய வாதம் தான் இப்போது அரசியலாகிறது. பணமோசடி அல்லது மணல் குவாரி வழக்குகளில் பல மாநில அமைச்சர்கள் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்திருப்பதால் அமலாக்கத் துறை அதிகாரிக்கு எதிராக தமிழ்நாடு அரசு விசாரணையை தொடங்கியிருக்கலாம்” என கூறினார்.
“இதுபோன்ற வழக்குகளில் அமலாக்கத் துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளன. சட்டப்படி அனைத்து குற்றங்களிலும் அமலாக்கத் துறையின் எப்.ஐ.ஆர் தவறாக உள்ளது. குற்றம் நடந்ததால் தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும். ஆனால் பணமோசடி முயற்சி என்ற அடிப்படையிலேயே எப்.ஐ.ஆர் போடுகின்றனர்” என்று அமலாக்கத் துறை மீது குற்றம்சாட்டினார் கபில் சிபல்.
மேலும் அவர், “உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற பிற மாநிலங்களில் அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மணல் கொள்ளை தொடர்பாக வேறு எந்த மாநிலத்திலாவது அமலாக்கத்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறதா? உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலை?” என கேள்வி எழுப்பினார்.
சிபலின் வாதத்துக்கு, “குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களை அரசு பாதுகாக்கக் கூடாது” என துஷார் மேத்தா பதிலளித்தார்.
“அப்படியானால் அசாம் முதல்வருக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டும்” என்றார் கபில் சிபல்.
“இது மீண்டும் அரசியலாகிறது” என துஷார் மேத்தா தெரிவித்தார்.
இதையடுத்து, “பிஎம்எல்ஏ குற்றங்களில் தமிழக காவல்துறை தாக்கல் செய்த எஃப்ஐஆர்கள் பகிரப்படவில்லை என்ற அமலாக்கத் துறையின் கூற்று உண்மையா?. எப்.ஐ.ஆரில் என்ன ரகசியம் இருக்கிறது? அவை ஏன் இணையதளத்தில் இல்லை?” என நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார்.
“எப்.ஐ.ஆர் இணையதளத்தில் இருக்க வேண்டும். ஆனால், உயரதிகாரிகள் உத்தரவின் படி, காவல்துறையின் மாநில இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் இதை செக் செய்யலாம்” என்றார் துஷார் மேத்தா. இதற்கு கபில் சிபல் மறுப்புத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மாநில அல்லது மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணையில் பாரபட்சம் குறித்த அனைத்து அச்சங்களையும் போக்க வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது. குற்றம்புரியாதவர்கள் தண்டிக்கப்படக் கூடாது” என்று குறிப்பிட்டனர்.
“ஊழல் அல்லது மணல் குவாரி விவகாரத்தில் பொது ஊழியர் மீது நீங்கள் வழக்குப்பதிவு செய்திருந்தால், அமலாக்கத் துறையின் விசாரணையை அனுமதிக்கமாட்டோம் என்று கூற மாநிலத்துக்கு என்ன உரிமை இருக்கிறது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இரு தரப்பும் பேசி சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், “தயவு செய்து ஆராய்ந்து நியாயமான மற்றும் வெளிப்படையான ஒரு வழிமுறையை சொல்லுங்கள்.
அதாவது நீங்கள் ஒரு வழிமுறையை பரிந்துரைக்கலாம். பிரச்சினையை தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற டிஜிபி அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பார்வையின் கீழ் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் அமலாக்கத் துறை இணைந்து விசாரிக்கும் வகையில் குழுவை அமைக்கலாம். இதுபோன்ற ஒரு வழிமுறையை நீங்கள் பரிந்துரைக்கலாம். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
இதன்மூலம் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, பழிவாங்கும் கைது நடவடிக்கைகள் தடுக்கப்படும்” என்று ஆலோசனை வழங்கினர்
“பழிவாங்கும் வகையில் கைது செய்யப்பட்டால், அதை கவனிக்க நீதிமன்றம் உள்ளது” என துஷார் மேத்தா கூறினார்.
“சிபிஐ அலுவலகங்கள், அமலாக்கத் துறை அலுவலகங்கள் நாடு முழுவதும் உள்ளது. இரு அமைப்புகளும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டால் நாட்டின் கதி என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். நாங்கள் உங்களை பழிவாங்குபவர்கள் என்றோ அல்லது அவர்களை பழிவாங்குபவர்கள் என்றோ சொல்லவில்லை” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அப்போது துஷார் மேத்தா, கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்காள மாநில காவல்துறை கைது செய்ததையும், முதல்வர் சிபிஐ அலுவலகத்திற்குள் நுழைந்ததையும் சுட்டிக்காட்டினார்.
அதனால் தான் ஒரு வழிமுறையை வகுக்க வேண்டும் என்று கூறுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உங்கள் மாநிலத்தில் என்ன ரியாக்ஷன்? ராமர் கோயில் பற்றி மத்திய அமைச்சர்களிடம் கேட்ட மோடி
ஆந்திராவில் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது… நடந்து என்ன?
Tusshar Mehta and Kapil Sibal fire arguments