காரசாரமான வாதங்களை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 12) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது.
சர்வதேச விதிகள்
இன்று காலை முதல் அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
“சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததால் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக சிரமப்பட்டன.
இதையடுத்துதான் ஐநாவின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதுமட்டுமின்றி ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றை கூட உருவாக்கியது.
அதில் 40 விதிகளை கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் இருக்கிறது. விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும்.
ஆனால் நாம் விதிகளை முறையாக கடைபிடிக்கிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.
அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கிறது.
பிஎம்எல்ஏ சட்டத்தின்படி அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்தவும் பரிந்துரை செய்யவும் முழு அதிகாரம் இருக்கிறது. அந்த சோதனையின் போது போதிய ஆதாரங்கள் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை அதிகரிக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
புலன் விசாரணை அதிகாரி காவல் துறை அதிகாரி இல்லை என்பது உண்மைதான். ஆனால் இச்சட்டத்தின் படி கைது செய்து விசாரிக்க முழு அதிகாரம் இருக்கிறது.
வங்கி மோசடி வழக்குகளில் 18,000 முதல் 19000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வங்கிகளுக்கு பெற்று கொடுத்திருக்கிறோம்.
இந்த வழக்கை பொறுத்தவரை செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்திருக்கிறோம். அதேசமயம் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை விசாரித்து வாங்கவும் எங்களுக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது” என்று சர்வதேச விதிமுறைகளை எல்லாம் குறிப்பிட்டு வாதாடினார்.
அப்போது மதிய உணவு இடைவேளை வந்ததும், அதற்குப் பின் 2.15 மணியளவில் விசாரணை தொடங்கி நடைபெற்றது.
யார் பொறுப்பு?
அப்போது நீதிபதி, “காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? ஒரு நாள் கூடவா காவலில் எடுக்கமுடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, அத்தகைய நபரிடம் எப்படி விசாரணை நடத்த முடியும். விசாரணையின் போது அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?. இங்கு பிரச்சினையே இதுதான்.
இப்போது நான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நேரம் மற்றும் தேதியை குறிப்பிடுகிறேன். அவர் ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டார். 1.41 மணிக்கு கைது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் மைத்துனருக்கு தெரிவிக்க முயற்சி நடந்தது” என்றார்.
மேலும் அவர், “செந்தில் பாலாஜிக்கு ஜூன் 14ஆம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. ஜூன் 15ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 16ஆம் தேதி 8 நாள் காவலில் வைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அப்போது நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன” என்று கூறி அந்த நிபந்தனைகளை நீதிபதி முன் வாசித்து காட்டினார்.
இதையடுத்து நீதிபதி கார்த்திகேயன், ‘செந்தில் பாலாஜிக்கு எப்போது அறுவை சிகிச்சை நடந்தது’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஜூன் 22” என்றார். அப்படியானால், அதுவரை செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் இருந்ததா? என்று நீதிபதி கேள்வி எழுப்ப, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஆம்” என பதிலளித்தார்.
தொடர்ந்து அவர், “காவலில் எடுக்க உத்தரவிட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள், அந்த கஸ்டடியை கேலிக்கூத்தாக்கியது. ஏனெனில் நாங்கள் அவரை விசாரிக்க முடியவில்லை” என்றார்.
அப்போது நீதிபதி, “காவலில் எடுக்கமுடியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதா” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு துஷார் மேத்தா ஆம் என்று சொல்ல, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இது ஜூன் 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குறிப்பேட்டில் உள்ளது” என்றார்.
இதை கேட்ட நீதிபதி, “அமலாக்கத் துறையால் காவலில் எடுக்க சாத்தியபடவில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது ஜூன் 17ஆம் தேதி இ-ஃபைலிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மெமோவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெமொ நகல் ஹார்டு காப்பியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு “ஆம்” என பதிலளித்தார் துஷார் மேத்தா.
முன்னதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செந்தில் பாலாஜிக்கு ஜூன் 22ஆம் தேதி பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதாக கூறியிருந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன, “ஆபரேஷன் 21/6/23 அன்று தானே” என்று கேள்வி எழுப்ப, என்.ஆர்.இளங்கோ, “ஆம்” என்றார்.
இதற்கு துஷார் மேத்தா, “இது பதிவாக எதிலும் இல்லை. செய்தித்தாள்களில் 21/6/23 என்று குறிப்பிடப்பட்டுள்ளன” என்றார்.
அதுபோன்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஜூன் 18ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது. ஆனால் அவர் அமலாக்கத் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார்” என்று வாதிட்டார்.
இதற்கு துஷார் மேத்தா, ”இதுபோன்று எங்கும் சொல்லப்படவில்லை” என்றார்.
தொடர்ந்து துஷார் மேத்தா வாதிடுகையில், “கைது செய்து முதல் 15 நாட்களுக்குள் கஸ்டடி கேட்டு நாங்கள் விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால் நாங்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டிருப்போம். நாங்கள் விண்ணப்பிக்காமல் இருந்திருந்தால் இது நடந்திருக்கும்.
அதுபோன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பிறகு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அது சட்டவிரோதக் காவலில் இருப்பதாகக் கூற முடியாது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்கிறார் என்றால், அவர் நீதிமன்ற காவலில் இருப்பதை ஒப்புகொள்கிறார்.
பிஎல்எம்ஏ சட்டப்பிரிவு 19ன் கீழ் சந்தேகம் அல்லது ஏதேனும் தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறையால் கைது செய்ய முடியாது. ஒரு நபர் பணமோசடி செய்த குற்றவாளி என்று சொல்வதற்கு ஆதாரம் தேவை. சட்டப்பிரிவு 41ஏ-வைக் காட்டிலும் பிஎல்எம்ஏ சட்டப்பிரிவு 19 மிகக் கடுமையானது.
பண மோசடி போன்ற குற்றங்களில் குற்றம் செய்தவர் ஒரு பட்டனை க்ளிக் செய்தால் போதும், ஆதாரங்கள் எல்லாம் அழிந்துவிடும். இப்போது நான் நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால், அந்த நோட்டீஸ் குற்றம்சாட்டப்பட்டவர் கையில் கிடைத்தவுடன் அவர் ஆதாரங்களை அழித்துவிடுவார்.
அதுபோன்று கைது செய்யப்படுவதற்கான காரணங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றில்லை. கூடிய விரைவில் தெரிவித்தால் போதும் என்று ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் இருக்கின்றன.
இப்போது செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். காவலில் வைத்து விசாரிக்கும் வாய்ப்பை மறுக்கக் கூடாது. இந்த 15 நாட்களில் நிலநடுக்கம் போன்று ஏதேனும் ஏற்பட்டால் அந்த நாட்களை கருத்தில் கொள்ள முடியுமா? அப்போது விசாரணைக்கு வாய்ப்பு மறுக்கப்படுமா?
கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அமலாக்கத் துறையால் கோர முடியும்.
40% அடைப்பு!
மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது” என குறிப்பிட்டார்.
இறுதியாக துஷார் மேத்தா , “இப்படி கைது நடவடிக்கையின் போது மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொண்டால் எப்படிதான் விசாரணை செய்ய முடியும். சில நேரங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஒருவருக்கு பங்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உள்ளாவதை விட அறுவை சிகிச்சை செய்து கொள்வதே எளிது என சிலர் நினைத்திருக்கலாம். பொதுவாக எல்லோரும் டெஸ்ட் எடுத்து பார்த்தால் அனைவரது இதயத்திலும் 40சதவிகிதம் அடைப்பு இருக்கும்” என்று பரபர வாதத்துடன் தன் வாதத்தை நிறைவு செய்தார்.
துஷார் மேத்தாவின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அவரது வாதத்துக்கு பதிலளிக்க வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நாளை மருத்துவ பரிசோதனைக்கு செல்ல இருப்பதால் வழக்கை நாளை மறுநாள் ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரலை பார்த்து, நீங்கள் மறுபிரதி வாதம் வைக்க விரும்புகிறீர்களா என நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்ப, “இல்லை… ஏதாவது தேவை ஏற்பட்டால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேஷன் இங்கு இருக்கிறார்” என குறிப்பிட்டார் துஷார் மேத்தா.
இதையடுத்து வழக்கை ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார்.
ஆனால் ஜூலை 14 காலை 10.30 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி கார்த்திகேயன் கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
பிரியா
IND vs WI: இந்திய அணியில் களமிறங்கிய 2 இளம் வீரர்கள்!
“மந்திரிக்காக தலைமைச் செயலாளரையே மாற்றியவர் கலைஞர்” -ஸ்டாலினுக்கு துரைமுருகன் மெசேஜ்!