டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து… யாருக்கு கிடைத்த வெற்றி : தலைவர்கள் கருத்து!

Published On:

| By christopher

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு இன்று (ஜனவரி 23) ரத்து செய்ததை அடுத்து மக்களுடன் அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் அறிவித்த நாள் முதலே அக்கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சட்டப்பேரவையிலும் டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை நேற்று டெல்லியில் மதுரை மேலூர் கிராம விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

இந்த நிலையில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதனை அரிட்டாப்பட்டி, மேலூர் கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனை முதல்வர் ஸ்டாலின் முதல் தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் ”டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்” என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை

மக்களின் போராட்டத்திற்கும், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக இயற்றிய தனித் தீர்மானத்திற்கும் கிடைத்த வெற்றிதான் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறுதியான போராட்டமும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றிய தனித் தீர்மானமும் கார்ப்பரேட்டுகளுக்கு துணை போக இருந்த ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை தவிடு பொடியாக்கியுள்ளது.

இதன் மூலம், பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி, சமண திருத்தலம், வரலாற்று தொன்மையான இடங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்.

விசிக தலைவர் திருமாவளவன்

“தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று டங்க்ஸ்டன் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சுரங்கத் துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்து இந்த கோரிக்கையை நான் வைத்த போது ‘தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி இந்தத் திட்டத்தை செயல்படுத்தமாட்டோம்’ என்று தெரிவித்தார்

அதன் போலவே இன்று அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி! தொடர்ந்து டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்திய தமிழ்நாட்டு மக்களுக்கும் குறிப்பாக மேலூர் பகுதி மக்களுக்கு கிடைத்த வெற்றி.

மதுரை சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன்

டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து! ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம், ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற உறுதிக்கும் முன்னால் பணிந்தது பாஜக. ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இச்செய்தி வெளியானவுடனாக இத்திட்டத்தால் தமிழர் வரலாற்றுப் பெருமைகள் குவிந்து கிடக்கும் மற்றும் உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க பகுதிகள் அழியக்கூடிய அபாயம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இது தொடர்பான தகவல்களைத் திரட்டி 19.11.2024 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். 21.11.2024 அன்று டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தும் இத்திட்டத்தைக் கைவிடக்கோரி வலியுறுத்தினேன். 3.12.2024 அன்று நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தின் பாதகமான விளைவுகளை எடுத்துரைத்தேன்.

இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பதிலளித்த ஒன்றிய சுரங்க அமைச்சகம் இத்திட்டத்தை உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தொடருவோம் என உறுதிபடத் தெரிவித்தது. இதற்கிடையில் தமிழ் நாடு அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் திட்டத்தைத் தொடர்வதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்தது.

அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 எக்டர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 எக்டர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்துப் பரப்புரை செய்தோம். ஒருபிடி மண்ணைக்கூட மேலூரில் இருந்து எடுக்க முடியாது என முழங்கினோம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மூன்று நாட்கள் மகத்தான நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜனவரி 7 ஆம் தேதி 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே சென்று போராட்டத்தை முன்னெடுத்தனர். திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பா.ஜ.க.வின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது.

எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது. டங்க்ஸ்டன் ஏல ஒப்பந்தத்தை வேதாந்தாவுக்கு எதிராக மட்டுமல்ல யாருக்கும் தரவிட மாட்டோம் என்னும் உறுதியும், ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்னும் தீரமும் , ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற மக்களிம் நெஞ்சுரமும் இன்று ஒன்றிய அரசை ஆட்டிப் பார்த்திருக்கிறது. அதன் விளைவாகவே ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதாக முழுமையாக அறிவித்துள்ளது.

இது உறுதிமிக்க மக்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. நமது வாழ்வையும், வரலாற்றையும் , வளத்தையும் பாதுக்காக்க நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி. போராட்டங்களே நம் மண்ணை மீட்கும் . நம் மக்களைக் காக்கும். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து அமைப்புகள், விவசாய பெருமக்கள், சூழல் ஆர்வலர்கள் என எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. இப்போதல்ல , எப்போது எந்த அரசும் எங்கள் வாழ்வையும், வளங்களையும் சூரையாட அனுமதிக்க மாட்டோம்.

தமிழர் வரலாற்றையும் மக்கள் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கனிம வளங்களை வேதாந்தாவிற்குத் தாரை வார்ப்பதில் இறுதிவரை ஒன்றிய அரசு உறுதியாகவே இருந்தது. ஆனால், மக்களின் எழுச்சிமிகு போராட்டம் இன்று பா.ஜ.க.வின் மூர்க்கத்தை வீழ்த்தியுள்ளது. முழுமையாக இத்திட்டம் ரத்து செய்யப்படாவிட்டால் என்றைக்குமே தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே அது நீடித்திருக்கும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலித்து, மதுரை மாவட்டம் மேலூர் பகுதி கிராமங்களில், டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததற்காக, மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், நமது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் நமது பிரதமரின் முடிவு, நமது விவசாயிகளின் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில், நமது பாசத்திற்குரிய பிரதமர், சொன்ன சொல்லின்படி நடந்து கொள்வதை எடுத்துக் காட்டியிருக்கிறது. மதுரை மேலூர் அம்பலக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்து, அவர்கள் கோரிக்கையைப் பரிசீலித்ததற்காக, நமது மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

வேதாந்தாவுக்குக் கொடுக்கப்பட்ட டங்க்ஸ்டன் ஏலம் ரத்து. மக்கள் போராட்டம் வெற்றி. மாநில உரிமையை மீறிய செயல் என்பதோடு அரிய கனிம வளங்களைத் தனியாருக்கு விடக்கூடாது, அது அரசின் கையில் மக்களின் சொத்தாகத் தொடர வேண்டும் என்பதுதான் #CPIM நிலைபாடு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை.

மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த மதுரை மக்களுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலூர் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

இந்தத் திட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நான் அம்பலப் படுத்தினேன். கடந்த திசம்பர் 26-ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் கலந்து கொண்டேன்.

அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருப்பது சரியான நடவடிக்கை.

அதேநேரத்தில் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் இத்தகைய திட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியை மேலூர் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து மதுரை மக்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கனிம வளத்தை விட மக்களின் நலனே முக்கியம் எனக்கருதி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. பல்லுயிர் பாரம்பரிய தளத்தையும் பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிய செப்டம்பர் 2023 முதல் ஏலம் முடிவடைந்த நாளான நவம்பர் 7, 2024 வரை எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மேலூர் பகுதியில், டங்ஸ்டன் திட்டம் வர உறுதுணையாக இருந்த திமுக அரசை மதுரை மாவட்ட மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் கபட நாடகமாடிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக கூறுவது, “பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக நினைக்குமாம்”என்ற கதையையே நினைவு படுத்துகிறது.

தமிழகத்தில் மக்களை போராட தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசியல் பலனடைய நினைத்த திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையிலும், கனிம வளத்தை விட மக்கள் நலனே முக்கியம் எனக்கருதியும் இம்முடிவை எடுத்திருக்கும் பிரதமர் மோடிக்கும், மத்திய கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel